உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன்

பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன்


தமிழ் திரையுலகின் பொற்காலம் என சொல்லப்படும் 1960களின் மத்தியில் நாயகர்களாக திரைப்பிரவேசம் செய்தவர்கள்தான் நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எஸ் எஸ் ஆர் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் கோலோச்சியிருந்த இந்தக் காலகட்டங்களில் இரண்டாம் கட்ட நாயகர்களாக அறிமுகமான இவ்விருவரில் மிகவும் வித்தியாசமான ஒரு அதிர்ஷ்ட நாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் ரவிச்சந்திரன். மலேசியாவின் கோலாலம்பூரில் தனது பள்ளிப் பருவத்தை முடித்து, கல்லூரி படிப்பினை திருச்சியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரி”யில் பயின்று, பின் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு பிரவேசம் செய்தவர்தான் நடிகர் ரவிச்சந்திரன்.

அப்போது புதுமை இயக்குநர் ஸ்ரீதர், தான் எடுக்கப் போகும் புதுப்படம் ஒன்றிற்கு புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த நேரம். நண்பர்கள் தூண்டுதலின் பேரில், எந்தவித பெரிய எதிர்பார்ப்பும் இன்றி, நடிகர் ரவிச்சந்திரனும் அந்த புதுமுகத் தேர்வில் கலந்து கொள்ள, இவரைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், தனது புதுப் படத்திற்கு தான் எதிர்பார்த்த வசீகரமான ஒரு துடிப்புமிக்க இளைஞன் கிடைத்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்து, அவரையே நாயகனாகவும் தேர்வு செய்துவிட்டார். அதுவரை பி எஸ் ராமன் என்ற இயற்பெயருடன் இருந்த அந்த இளைஞன், அன்றிலிருந்து ரவிச்சந்திரன் என்ற நட்சத்திரப் பெயர் கொண்டு அழைக்கப்படலானார்.

சினிமா என்ற கனவுலகில் நடித்துவிட மாட்டோமா? என ஏங்கித் தவிக்கும் லட்சக்கணக்கானோர் மத்தியில், எதிர்பார்ப்பு ஏதுமின்றி எடுத்த முதல் முயற்சியிலேயே முழு வெற்றி பெற்ற ஓர் அதிர்ஷ்ட நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் ரவிச்சந்திரனின் முதல் திரைப்படமே அவர் முழுநீள நாயகனாக நடித்த திரைப்படம். முதல் திரைப்படமே முழுநீள வண்ணத் திரைப்படம், முதல் திரைப்படமே 25 வாரங்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் என முழுமையான அதிர்ஷ்டத்தோடு கலையுலகில் கால் பதித்து, “இதயக்கமலம்”, “குமரிப்பெண்”, “நாம் மூவர்”, “அதே கண்கள்”, “நான்”, “மூன்றெழுத்து” என எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களைத் தந்து, எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிக்கு இணையான ஓர் வெற்றியைப் பதிவு செய்த இவர், படிப்பிற்காக சென்னை வந்து, நடிக்கும் வாய்ப்பு கிட்டி, நாயகனாக உயர காரணமான “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் இவருக்கு கிடைத்த ஓர் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்காது என்பதே உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !