உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு

‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு


ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படம் 'வா வாத்தியார்'. இந்தப் படத்தை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை, ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‛‛ஏற்கனவே பலமுறை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. ‛கங்குவா, தங்கலான்' உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் வைப்பாகவும் நீதிமன்றத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது. தற்போது மீண்டும், கடனை செலுத்தாமல் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இதுவரை 7 முறை கடனை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், டிசம்பர் 12ம் தேதி திரையிட திட்டமிட்டுள்ள ‛வா வாத்தியார்' படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிடக்கூடாது'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் வெளியாக இருந்த ‛வா வாத்தியார்' திரைப்படம் மேலும் தள்ளிப்போகிறது. ஏற்கனவே படம் முடிந்து 2 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !