75, 50, 25 : ரஜினிகாந்த் பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று விமர்சையாக நடந்து வருகிறது. இதை முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அவர் 75வது பிறந்தநாள், சினிமாவில் ரஜினிக்கு 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்குபின் படையப்பா ரீ ரிலீஸ் என்று 3 நிகழ்வாக பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சென்னை காசி தியேட்டரில் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கேக் வெட்டி படையப்பா படத்தை பார்த்து ரசித்து வருகிறார். மதுரையில் படையப்பாவை முதலில் பார்த்தேன். 25 ஆண்டுகளுக்குபின் மீண்டும் ரசிகர்களுடன் பார்ப்பது மகிழ்ச்சி. நான் மீண்டும் ரஜினியுடன் இணைவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சென்னை ரோகிணி தியேட்டரில் படையப்பா பார்த்து வருகிறார் லதா ரஜினிகாந்த். நேற்று நள்ளிரவு 12 மணிக்கே போயஸ் கார்டன் ரஜினி வீட்டு வாசலில் இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர் ரசிகர்கள். அப்போது வெளியே வந்த லதா ரஜினிகாந்த் ரசிகர்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு, அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல்பிரமுகர்கள், கமல், தனுஷ், குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.