அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் 'டிரோல்கள்'
போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகும் தெலுங்குப் படம் 'அகண்டா 2'. இப்படத்திற்கான பிரிமியர் காட்சிகள் நேற்று இரவு நடந்தது. ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை படக்குழு தற்போது உணர்ந்திருக்கும்.
பாலகிருஷ்ணா படம் என்றாலே அதிரடி மாஸ் ஆக்ஷன் இருக்கும். சாதாரண மனிதன் செய்யும் காட்சிகள் இல்லாமல் சூப்பர் பவர் பெற்ற ஒரு மனிதன் என்ன செய்வானோ அதைத்தான் அவரது படங்களின் காட்சிகளாக வழக்கமாக வைப்பார்கள். ஆனாலும், அதை ரசிப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது.
நேற்றைய பிரிமியர் காட்சிகளுக்குப் பிறகு அப்படத்தின் அப்படியான மாஸ் காட்சிகளை படம் பார்த்த ரசிகர்கள் பலர் மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்து பரப்புகிறார்கள். இது படத்திற்கு பாசிட்டிவ்வாக அமைவதை விட நெகட்டிவ்வாக அமையவும் வாய்ப்புகள் உண்டு. இப்பட காப்பிரைட் மீறலில் பகிரப்படும் வீடியோக்களைத் தடுப்பதற்கு படக்குழு நிறையவே உழைக்க வேண்டியிருக்கும்.