குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள்
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி ஒரு குழப்பமான நிலை, சூழல் இருந்திருக்குமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு கடந்த சில வாரங்களாக இங்குள்ள வெளியீட்டு நிலைமை இருக்கிறது. படங்களின் வெளியீட்டில் எந்தவிதமான திட்டமிடலும் இல்லை என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மாதத்தில் வெளியாக வேண்டிய படங்கள் என சில படங்கள் மாறி மாறி தள்ளி வைக்கப்பட்டதே அதற்குக் காரணம். இதனால், தியேட்டர்காரர்கள் கடும் கோபத்தில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஆண்டு இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிகப் படங்கள் வரும். பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதியைப் பொறுத்து மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதிகளை முடிவு செய்வார்கள்.
ஆனால், தமிழ் சினிமாவில் புதிய படங்களின் வெளியீடு பற்றிய ஒரு ஒழுங்கமுறை இல்லாததால் தியேட்டர்காரர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
டிசம்பர் 5 வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட 'வா வாத்தியார்' டிசம்பர் 12க்குத் தள்ளி வைக்கப்பட்டது. நீதிமன்ற இடைக்காலத் தடை காரணமாக படத்தின் வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்கள்.
டிசம்பர் 5ல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு பின் டிசம்பர் 12க்குத் தள்ளி வைக்கப்பட்ட 'லாக் டவுன்' படத்தை மீண்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்கள்.
டிசம்பர் 18 வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் வெளியீடும் தள்ளிப் போகும் என்பதே தற்போதைய நிலை. இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் எந்தவித புரமோஷனையும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கவில்லை. ஆனால், டிசம்பர் 25ல் அறிவிக்கப்பட்ட 'சிறை' படத்தின் அப்டேட்டை மட்டும் நேற்று கூட வெளியிட்டுள்ளார்கள்.
தங்களுக்குள் இருக்கும் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டு அதன்பிறகு பட வெளியீட்டுத் தேதிகளை தயாரிப்பாளர்கள் அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்கும் தேதியிலிருந்து எந்த விதத்திலும் பின் வாங்கக் கூடாது என்பதே தியேட்டர்காரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.