திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால்
மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களாக நடைபெற்று வந்த நடிகை கடத்தல் வழக்கில் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப்புக்கு தொடர்பு இல்லை என கூறி நீதிமன்றத்தால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த உற்சாகத்துடன் அவர் நடிப்பில் உருவாகியுள்ள, வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ள 'ப ப ப' படத்தை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான டிரைலரில் அவரது மாஸ் என்ட்ரி ரசிகர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளது. தனஞ்செயன் சங்கர் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தின் கதையை 'ஒரு அடார் லவ்' படத்தில் கதாநாயகியாக நடித்த நூரின் ஷெரீப் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர்.
கடந்த வருடம் இந்தப்படத்திற்காக வெளியான போஸ்டர் ஒன்றில் ஒரு ஜிப்ஸி ஜீப் மீது திலீப் அமர்ந்திருப்பது போன்று இடம்பெற்றிருந்தது. அந்த ஜிப்ஸியில் 'டிஎன் 59 100' என்கிற எண் பொறிக்கப்பட்டிருந்தது. இது 'கில்லி' படத்தில் பிரகாஷ்ராஜ் இடம் இருந்து தப்பிப்பதற்காக விஜய் பயன்படுத்திய வண்டியின் எண் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த படத்தில் இதுவும் ஒரு முக்கிய கதாபாத்திரம் போல இடம்பெற்று இருந்தது.
இதனால் கில்லி படத்திற்கும் இந்த படத்திற்கும் ஏதோ ஒரு கனெக்சன் இருக்கும் என அப்போதே ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள இதன் டிரைலரின் இறுதியில் இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கில்லி படத்தில் இடம்பெற்ற பாடலின் இரண்டு வரிகளை மோகன்லால் பாடியுள்ளார். அதனால் நிச்சயம் கில்லி படம் சம்பந்தமான ஏதோ ஒரு விஷயம் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது என எதிர்பார்க்கலாம்.