தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர்
இது ரீ ரிலீஸ் காலம் என்பது போல தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் 25 வருடங்களுக்கு முன்பு வெளியான படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இதே போல சுரேஷ்கோபி, ஜெயராம் மற்றும் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் ஆகியோர் நடிப்பில் 1998ல் வெளியான சம்மர் இன் பெத்லகம் திரைப்படமும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இதை சிபி மலயில் இயக்கியிருந்தார். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற எத்ரையோ (எத்தனையோ) ஜென்மமாகி என்கிற பாடல் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் பாடலாக இருக்கிறது. தற்போது இந்த படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளதை தொடர்ந்து இந்தப் பாடலில் நடைபெற்ற எதிர்பாராத திருப்பம் குறித்து இசையமைப்பாளர் வித்யாசாகர் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறும்போது, “நானும் இயக்குனர் சிபி மலயிலும் இணைந்து தமிழில் ஒரு படம் பண்ணலாம் என முடிவு எடுத்தோம். சில காரணங்களால் அந்த படம் நடைபெறாமல் போனது. அப்போது அந்த படத்திற்காக தமிழில் ஒரு பாட்டை கம்போஸ் செய்திருந்தேன். அதன்பிறகு நான் இசையமைத்த வேறொரு தமிழ் படத்திற்கு அந்த பாடலை பயன்படுத்தினேன். ஆனால் சில காரணங்களால் அங்கு தமிழ் படமும் வெளியாகவே இல்லை. இந்த சமயத்தில் தான் சம்மர் இன் பெத்லகம் படத்திற்காக மீண்டும் நானும் இயக்குனர் சிபி மலயிலும் இணைந்த போது ஏற்கனவே உருவாக்கிய அந்தப் பாட்டு குறித்து அவர் கேட்டார்.
படம் வெளியாகாமல் அந்த பாடல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதனால் அந்த பாடலை எடுத்து சம்மர் இன் பெத்லகம் படத்தில் மலையாள வெர்சனாக பயன்படுத்தினோம். ஆனால் படம் வெளியான பிறகு அந்த பாடலே மலையாள திரை உலகிற்கு எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது” என்று கூறியுள்ளார்.