உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கர்மயோதா' பட கதை வழக்கு ; 30 லட்சம் நஷ்ட ஈடு தர நீதிமன்றம் உத்தரவு

'கர்மயோதா' பட கதை வழக்கு ; 30 லட்சம் நஷ்ட ஈடு தர நீதிமன்றம் உத்தரவு


மலையாளத்தில் மோகன்லாலை வைத்து கீர்த்தி சக்ரா, குருசேத்ரா உள்ளிட்ட ராணுவ பின்னணி கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மேஜர் ரவி. கடந்த 2012ல் மோகன்லால் நடிப்பில் இவர் கர்மயோதா என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதேசமயம் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அதை மேஜர் ரவி தன் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார் என்றும் அந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை நிறுத்தி வைக்க மனு தாக்கல் செய்திருந்தார் கதாசிரியர் ரெஜி மேத்யூ என்பவர். ஆனால் அந்த சமயத்தில் நீதிமன்றம் 5 லட்சம் பிணைத்தொகையாக தயாரிப்பு நிறுவனத்தை செலுத்த சொல்லி படத்தை வெளியிட அனுமதித்தது.

கிட்டத்தட்ட 13 வருடங்களாக கோட்டயம் வணிக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து, தற்போது இந்த கதை ரெஜி மேத்யூவுக்கு சொந்தமானது தான் என உறுதி செய்யப்பட்டு அவருக்கு நஷ்ட ஈடாக 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, படத்தின் கதைக்கான காப்பிரைட் உரிமையையும் ரெஜி மேத்யூவுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த படத்தின் காப்பிரைட் விஷயம் குறித்து மேஜர் ரவியிடம் அந்த சமயத்தில் கேட்கப்பட்டபோது, இந்த படத்தின் கதை குறித்து பல கதாசிரியர்களுடன் தான் விவாதித்துள்ளதாகவும் அதில் ரெஜி மேத்யூவும் ஒருவர் என்றும் அதை வைத்து அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும் அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !