கேஜிஎப் பட இணை இயக்குனரின் மகன் லிப்ட் விபத்தில் மரணம் ; பவன் கல்யாண் இரங்கல்
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் 'சலார்' உள்ளிட்ட படங்களில் இயக்குனர் பிரசாந்த் நீலிடம் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் கீர்த்தன் நடகவுடா. இந்த படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கி வரும் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது நான்கரை வயது மகன் சிறுவன் சிரஞ்சீவி ஷோனார்ஸ் லிப்ட் விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளான்.
எப்போதும் துறுதுறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் இந்த சிறுவன் மரணம் அடைந்தது பெற்றோரையும் அருகில் உள்ளவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மறைவு குறித்து பிரபல நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தனது ஆழ்ந்த இரங்கல்களை கீர்த்தன் நடகவுடா குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த லிப்ட் விபத்து மரணம் எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.