உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 275 படங்களைக் கடந்த 2025 : அடுத்த வருடம் 300ஐக் கடக்குமா ?

275 படங்களைக் கடந்த 2025 : அடுத்த வருடம் 300ஐக் கடக்குமா ?

தமிழ் சினிமாவின் முதல் மவுனப் படமாக 1918ல் 'கீசக வதம்', முதல் பேசும் படமாக 1931ம் 'காளிதாஸ்' படங்கள் வெளிவந்தன. மவுனப் படத்தைக் கணக்கில் கொண்டால் 100 ஆண்டுகளைக் கடந்தும், பேசும் படத்தைக் கணக்கில் கொண்டால் 100வது ஆண்டை நெருங்கியும் உள்ளோம்.

1931, 32, 33ல் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாக வெளிவந்தது, 1935 முதல் 10 படங்களைக் கடந்தது. 30களை முடிப்பதற்குள் 20, 30 என உயர்ந்து கொண்டே வந்தது. 1940களிலும் அது தொடர்ந்து சுதந்திரம் கிடைத்த பின்பு 50, 60களலும் அதே நிலையே நீடித்தது. 70கள் வரையிலும் 50ஐக் கூடக் கடக்கவில்லை.

1972ம் ஆண்டு 50ஐக் கடந்து பயணிக்க ஆரம்பித்தது. 70களின் இறுதியில் 100ஐ நெருங்கி, 1980ல் வண்ணப் படங்களின் அதிக வரவுடன் 100ஐக் கடந்து செஞ்சுரி அடித்தது. 80, 90ம் வருடங்களில் 100 படங்கள் என்பது சராசரியான ஒன்றாக தொடர்ந்து வந்தது.

2000ம் பிறந்த பிறகு அந்த 100 கூட சில வருடங்களில் இல்லாமல் போனது. 2010க்குப் பிறகு 100 படங்களுக்குக் குறையாமல் வருடா வருடம் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. 2013ல் 150ஐக் கடந்த எண்ணிக்கை, அடுத்த வருடமான 2014ல் 200ஐக் கடந்து ஆச்சரியப்படுத்தியது. கொரானோ வருடங்களான 2021, 2022ஐத் தவிர 200 என்பது இருந்து வந்தது.

இந்த வருடம் ஆச்சரியப்படும் விதத்தில் செப்டம்பர் மாதத்திலேயே 200ஐக் கடந்து, நவம்பர் மாதத்தில் 250ஐக் கடந்தது. நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும், இந்த டிசம்பர் மாதத்தில் கடந்த மூன்று வாரங்களில் வெளியான படங்களையும் சேர்த்தால் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 275ஐக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அடுத்த வாரம் இந்த வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தினம் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகியவற்றால் டிசம்பர் 25ல் 10 படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்த வருடத்தின் எண்ணிக்கை 300ஐக் கடக்க வாய்ப்பில்லை. அடுத்த வருடத்தில் அதுவும் நடந்துவிடுமா என்பது இனிமேல்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ஆதிகுடி கொற்கை
2025-12-20 07:00:17

குப்பைகள் அதிகமானால் மாசு தான் ஏற்படும் !!!