உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

மலையாள திரையுலகின் பிரபல சீனியர் குணச்சித்திர நடிகர் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (டிச., 20) காலை காலமானார். அவருக்கு வயது 69. இவரது மறைவு மலையாள திரையுலகிலும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1956ல் கேரளாவில் தலச்சேரி அருகில் உள்ள பால்யம் என்கிற ஊரில் பிறந்த சீனிவாசன் மட்டனூரில் உள்ள கல்லூரியில் டிகிரியை முடித்துவிட்டு அதன் பிறகு தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார். 1977ல் மலையாளத்தில் பி.ஏ பேக்கர் இயக்கிய மணிமுழக்கம் படத்தில் முதன் முறையாக நடிகராக அறிமுகமான சீனிவாசன், இந்த 48 வருட திரையுலக பயணத்தில் கிட்டத்தட்ட 225 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்

ஆரம்பத்தில் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்த சீனிவாசன் காலப்போக்கில் மோகன்லால், மம்முட்டி போன்றவர்களுடன் அவர்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க துவங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக மோகன்லால், சீனிவாசன் கூட்டணியில் உருவான படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அந்த வகையில் நாடோடிக்காற்று உதயநாணுதாரம், பட்டினப்பிரவேசம், வரவேற்பு உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்டவர் சீனிவாசன். கிட்டத்தட்ட 55 படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார். குறிப்பாக பிரபல மலையாள இயக்குனர்கள் பிரியதர்ஷன், சத்யன் அந்திக்காடு இவர்கள் கூட்டணியில் சீனிவாசன் இணைந்து கதை எழுதிய பல படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின.

இதில் இவர் கதை எழுதிய நாடோடிக்காற்று திரைப்படம் மலையாளத்திலேயே அதன் அடுத்தடுத்த பாகங்களாக பட்டினப்பிரவேசம் மற்றும் அக்கர அக்கர அக்கர ஆகிய படங்களாக தொடர்ந்து வெளியானது, இவரது திரையுலக பயணத்தில் ஹைலைட்டான ஒன்று. இந்த படம் தமிழில் பாண்டியராஜன் நடிப்பில் கதாநாயகன் என்கிற பெயரில் தமிழில் வெளியானது. அதேபோல உதய நாணுதாரம், வடக்கு நோக்கி எந்திரம் உள்ளிட்ட இவரது பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

ஒரு இயக்குனராக வடக்கு நோக்கி எந்திரம் மற்றும் சிந்தாவிஷ்டாயாய சியாமளா என இரண்டு படங்களையும் இவர் இயக்கியுள்ளார். மம்முட்டி நடித்த கதபறயும் போல் மற்றும் அவரது மகன் வினித் சீனிவாசன் இயக்கிய தட்டத்தின் மறையத்து ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் கதை எழுதி மம்முட்டியுடன் இணைந்து நடித்த கதபறயும் போல் படம் தான் தமிழில் ரஜினி நடிப்பில் குசேலன் ஆக ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

1988ல் இவர் இயக்கி நடித்த சிந்தா விஷ்டாயாயா சியாமளா படத்தில் சிறந்த சமூக கருத்தை சொன்னதற்காக அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அது மட்டுமல்ல கேரள அரசு, பிலிம்பேர், ஆசியாநெட் உள்ளிட்ட விருதுகளை நடிகராக, சிறந்த கதாசிரியராக என பல பிரிவுகளில் பலமுறை பெற்றுள்ளார் சீனிவாசன்.

2019 வரை பிஸியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக நடிப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். 2020க்கு பிறகு இவர் சுமார் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் பார்த்திபன் நடித்த புள்ள குட்டிக்காரன் மற்றும் பிரியதர்ஷின் இயக்கிய லேசா லேசா என இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ள சீனிவாசன் வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்கவில்லை.

சீனிவாசனுக்கு விமலா என்ற மனைவி உள்ளார். இவரது மகன்கள் வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே தங்களது தந்தையைப் போலவே பன்முக திறமை கொண்டவர்களாக குறிப்பாக டைரக்ஷனிலும் நடிப்பிலும் மலையாள திரையுலகில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றனர்.

ரஜினி இரங்கல்
மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியானேன். பிலிம் இன்ஸ்டியூட்டில் அவர் எனது கிளாஸ்மேட். அருமையான நடிகர், நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

அஞ்சலி
மருத்துவமனையில் இருந்து சீனிவாசன் உடல் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கந்தநாட்டில் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதியம் 1 மணி முதல் 3 மணி வரை எர்ணாகுளம் டவுன் ஹாலில் வைக்கப்படும். அவரது மகன்கள் கொச்சி வந்த பிறகு இறுதிச்சடங்குகள் குறித்து முடிவு செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !