உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன்

துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன்

பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் உடல் நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை காலமானார். தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு சோசியல் மீடியா மூலமாக தனது இரங்கலை தெரிவித்தார். கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சூர்யா நேற்று (ஞாயிறு_ நேரில் சென்று சீனிவாசனுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபனும் கேரளாவிற்கு சென்று நடிகர் சீனிவாசனுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தி உள்ளார். அதேசமயம் அவர் தனது துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டு பல சிரமங்களுக்கிடையே கேரள பயணம் செய்து தனது நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சீனிவாசன் தமிழில் நடித்தது இரண்டே இரண்டு படங்கள். ஒன்று பார்த்திபன் இயக்கி நடித்த புள்ள குட்டிக்காரன். இன்னொன்று பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா. இதில் புள்ள குட்டிக்காரன் படப்பிடிப்பின்போது சீனிவாசன் உடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பு காரணமாகவே தனது துபாய் பயணத்தை கூட கேன்சல் செய்துவிட்டு கேரளா சென்று வந்துள்ளார் பார்த்திபன்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சீனிவாசன் மறைந்த செய்தி கேட்டதும் என் நண்பனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என மனது துடித்தது. எனக்கு அன்று துபாய் பயணம் இருந்தது. துபாயில் ஹோட்டலும் புக் செய்யப்பட்டு இருந்தாலும் அதை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு, நானே வீட்டில் இருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு கார் ஓட்டி சென்றேன். வழியில் மூன்று நான்கு இடங்களில் விபத்து கூட எனக்கு ஏற்பட்டிருக்கும். ஒரு வழியாக விமான நிலையம் சென்றால் அங்கே கொச்சின் செல்லும் விமானம் கிளம்ப தயாராக இருக்கிறது. ஆனால் விமானத்தில் ஒரு இருக்கை கூட காலி இல்லை.

அங்கிருந்த இன்டிகோ மேனேஜரிடம் தயவு செய்து பைலட் அருகிலாவது ஒரு சீட் பிடித்து தாருங்கள், உட்கார்ந்து கொண்டு செல்கிறேன் என்று கேட்டேன். அதன் பிறகு இண்டிகோ விமான ஊழியர் ஒருவரின் இருக்கையை எனக்கு ஒதுக்கி கொடுத்தார்கள். கேரளா சென்று என் நண்பன் சீனிவாசனுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். பணம் நம்மிடம் நிறைய இருக்கும்போது பலவிதமான நபர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் கஷ்டப்பட்ட சமயத்தில் எனக்கு அப்படி ஒரு நட்பாக, ஆதரவாக இருந்த ஒரு மனிதர்தான் சீனிவாசன்.

அங்கே என்னை யார் கவனிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எனக்கு மனதில் தோன்றவே இல்லை. ஆனாலும் மலையாளத்தில் நான் நடித்த எஸ்கேப் பிரம் உகாண்டா படத்தின் இயக்குனர் ராஜேஷ் என்னை கண்டுகொண்டு உடன் இருந்து அழைத்துச் சென்றார். தனது நண்பனுக்காக நான் இவ்வளவு தூரம் பயணித்து வந்தது கண்டு நெகிழ்ந்து போய் உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் சார் என்று எனக்கு தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார் பார்த்திபன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !