2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்'
2025ம் ஆண்டின் கடைசி மாதத்தில் வசூலை அள்ளிக் குவிக்கும் ஒரு படமாக ஹிந்திப் படமான 'துரந்தர்' அமைந்துள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. சுமார் 300 கோடி செலவில் தயாரான இந்தப் படம் தற்போது 870.30 கோடி வசூலை தாண்டி 900 கோடியை நெருங்கியுள்ளது.
2025ல் இதுவரை வெளியான படங்களில் கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' படம் சுமார் 850 கோடி வசூலைக் கடந்து முதலிடத்தில் இருந்தது. அந்த வசூலை தற்போது 'துரந்தர்' முறியடித்துள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 100 கோடி வசூலித்தால் 1000 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது. அடுத்து அரையாண்டு பள்ளித் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை, புத்தாண்டு விடுமுறை என வருவதால் நிச்சயம் அந்த சாதனையைப் புரியும் என எதிர்பார்க்கிறார்கள்.
ரன்வீர் சிங் நடித்து வெளிவந்த படங்களில் அதிக வசூலில் முதலிடத்தை இந்தப் படம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2018ல் வெளிவந்த 'பத்மாவத்' படம் சுமார் 550 கோடி வசூலைப் பிடித்து முதலிடத்தில் இருந்தது.