உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன்

2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன்

2025ம் ஆண்டில் இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்த ஒரே நடிகர் பிரதீப் ரங்கநாதன். பிப்ரவரி 21ல் வெளிவந்த 'டிராகன்' படம் 150 கோடி வசூலித்து, இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்ற பெருமையைப் பெற்றது. அதற்கடுத்து தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ல் வெளிவந்த 'டியூட்' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றியடைந்தது.

அடுத்து கடந்த வாரம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படமும் அவருக்கு ஒரு ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுத் தரும் என திரையுலகத்தில் நம்பினார்கள். ஆனால், அன்றைய தினம் அப்படம் வெளியாகவில்லை. படத்தைத் தள்ளி வைக்கிறோம் என இதுவரை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிடும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஒரு மாத காலமாக எந்தப் பதிவையும் போடவில்லை. பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் அவர் கூட அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தும் இன்னும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

இந்த வாரத்திலும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பில்லை. அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அந்நிறுவனத்தின் வாரிசு எல்கே அக்ஷய்குமார் மற்றும் விக்ரம் பிரபு நடிக்கும் 'சிறை' படத்தை டிசம்பர் 25ம் தேதி வெளியிடுகிறது.

தயாரிப்பாளர்களாக அறிவிக்கும் வரை 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியீட்டிற்கு உத்தரவாதமில்லை. அதனால், இந்த ஆண்டிலேயே ஹாட்ரிக் வெற்றி பெறும் வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்குப் பறி போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

sugumar s, CHENNAI
2025-12-23 15:04:27

useless fellow. taking only 3rd rated pictures. people should s him to some other profession as he would spoil the public.