திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன்
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா படித்தவர். தற்போது அவர் 'சிக்மா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தற்போது திட்டமிட்டபடி படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இது குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறுகையில், “லைகா போன்ற ஒரு மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது உண்மையிலேயே பாக்கியமாகக் கருதுகிறேன்.
கதைக்கு என்ன தேவையோ அதை தயாரிப்பாளர்களாக எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செய்து கொடுத்து படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய கிரியேட்டிவ் புராசெஸில் முழு நம்பிக்கை வைத்து எந்த குறுக்கீடும் அவர்கள் செய்யாததால் படப்பிடிப்பை திட்டமிட்ட 80 நாட்கள் ஷெட்யூலுக்கு முன்பாகவே முடித்தோம்.
'சிக்மா' பட நடிகர்கள் மற்றும் குழுவினரின் அற்புதமான முயற்சிக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி. படம் நல்லபடியாக நிறைவடைய ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன், தமிழ் குமரன் மற்றும் லைகா நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.