நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக்
மலையாள திரையுலகில் நடிகர் நிவின்பாலி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு, தான் அறிமுகமான முதல் படத்திலேயே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து நடித்து வெளியான படங்கள் எல்லாம் இளைஞர்களை பிரதிபலிக்கும் விதமாகவும் காமெடிக்கு முக்கியத்துவம் தரும் படமாகவும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் தொடர்ந்து பெற்று வந்தன. ஆனால் சமீபகாலமாக குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களில் நிவின்பாலிக்கு சொல்லும்படியாக ஒரு வெற்றிப் படம் கூட அமையவில்லை.
இந்த நிலையில் அவரது நடிப்பில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்வம் மாயா' திரைப்படம் நாளை (டிசம்பர் 25) வெளியாகிறது. இந்த படத்தில் நீண்ட நாளைக்கு பிறகு அவரும் அவரது காமெடி கூட்டாளியான அஜூ வர்கீஸும் இணைந்து காமெடியில் கலக்கி இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் நிவின்பாலி மீண்டும் காமெடி ஜானருக்கு திரும்பி விட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.
இதுபற்றி சமீபத்திய பேட்டியில் நடிகர் நிவின்பாலியே கூறும்போது, “தொடர்ந்து நகைச்சுவை பாணியிலான படங்களில் நடித்து வந்தபோது என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் உன்னை எல்லோரும் மறந்து விடுவார்கள். அதனால் வலுவான கதை அம்சம், கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தான் இன்னும் ரசிகர்களிடம், வெகுஜன மக்களிடம் ஆழமாக செல்ல முடியும் என்று கூறினார்கள். எனக்கு அப்போது ஒரு குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்குமோ என்று தான் அடுத்தடுத்து சில கனமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தேன்.
ஆனால் அவை எனக்கு கை கொடுக்கவில்லை. அப்படி அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்தபோது எனக்கு அறிவுரை சொன்ன அதே நட்பு வட்டாரம் தான் ஏன் இப்படி தோல்வி படமாக கொடுக்கிறாய், என்ன ஆச்சு, நல்ல காமெடி படமாக கொடுத்து வந்தாயே என்று ஒன்றும் தெரியாதது போல் மீண்டும் என்னிடம் கேட்டார்கள். அதனால் இனி ரசிகர்கள் விரும்பும் விதமாக வழக்கமான என்னுடைய பாணியில் இருக்கும் விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.