'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ?
மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹிந்தியில் இந்த இரண்டு பாகங்களையும் ரீமேக் செய்து நடித்த நடிகர் அஜய் தேவ்கன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளில் இறங்கி, வரும் அக்டோபர் 2ம் தேதி படம் வெளியாகும் என்றும் சமீபத்தில் அறிவித்தார்.
முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கிய நடிகர்கள் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து இந்த படத்திலும் இடம் பெறுகிறார்கள். அதே சமயம் இரண்டாம் பாகத்தில், கண்டிப்புக்கு பெயர் போன பெண் அதிகாரி தபுவின் நண்பராக இன்னொரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அக்ஷய் கண்ணா இணைந்து மிரட்டலான நடிப்பை கொடுத்தார். மலையாளத்தில் நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திலும் முரளிகோபி இடம் பெறுகிறார்.
இந்த நிலையில் தான் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கண்ணா இந்த மூன்றாம் பாகத்தில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன. பிரபல நடிகர் தான் என்றாலும் கூட கடந்த சில வருடங்களாகவே அக்ஷய் கண்ணாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையாத நிலையில் சமீபத்தில் வெளியான 'துரந்தர்' படத்தில் அவரது நடிப்பும் ரஹ்மான் டகாய்ட் என்கிற அவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மீண்டும் அக்ஷய் கண்ணாவை தேடி பட வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. இந்த நிலையில் தான் அவர் திரிஷ்யம் 3 படத்திலிருந்து வெளியேறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. துரந்தர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தி கேட்டார் என்றும் அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் விலகி விட்டார் என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் திரிஷ்யம் 3 படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து உருவாக்க வேண்டும் என்று கதையில் குறுக்கீடு செய்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர் இந்தப் படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.