தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் 2024 டிசம்பர் 5ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா 2'.
அப்படத்தின் பிரிமியர் காட்சி, ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான சந்தியா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டு அதில் ரேவதி என்ற 39 வயதுப் பெண் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து பின்னர் வீடு திரும்பினார்.
அந்த கூட்ட நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, இந்த வழக்கின் அடுத்த கட்ட நிலை பற்றி ஹைதரபாத் போலீஸ் கமிஷனர் சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மொத்தம் 23 பேர் குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவர்களில் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் 9 பேர் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த வருடத் துவக்கத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் போலீஸ் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்த வழக்கில், நிகழ்ச்சி நிர்வாகக் குளறுபடிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தத் தவறியது, பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்டவை தொடர்புடைய தியேட்டர் நிர்வாகம், விழா குழுவினர், தனியார் செக்யூரிட்டியினர் உள்ளிட்டவர்களும் குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் இந்த வழக்கின் 11வது குற்றவாளியாக இடம் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக இந்த வழக்கு தற்போது பரபரப்பு அடைந்துள்ளது. அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.