உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல"

பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல"


குடும்ப உறவுகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் உணர்வுகளையே கதையின் மையக் கருவாகக் கொண்டு, குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த குடும்பத் திரைப்படங்களாகத் தந்து, தமிழ் திரையுலகில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த 'இயக்குநர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணனுக்குப் பின், அதை சரியாகச் செய்து நூறு சதவிகிதம் வெற்றி கண்ட இயக்குநர் ஒருவர் உண்டு என்றால் அது இயக்குநர் விக்ரமன் என்பது சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே.

தனது திரைக்கதையின் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் உறவுகளின் உன்னதத்தையும், அதன் ஆழத்தையும் பார்வையாளர்களின் மனங்களில் அழுத்தமாக பதியச் செய்து, படத்தை வெற்றி என்ற இலக்கை நோக்கி இழுத்துச் செல்லும் சாதுர்யமிக்க இயக்குநர்தான் இவர். இவரது கைவண்ணத்தில் வித்தியாசமான தோற்றப் பொலிவில் நடிகர் விஜயகாந்த் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம்தான் இந்த “வானத்தைப் போல.”

“பூவே உனக்காக”, “சூர்யவம்சம்”, “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” போன்ற இயக்குநர் விக்ரமனின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மில்லெனியத்தின் முதல் திரைப்படமாகவும், மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்த திரைப்படமாகவும் வெளிவந்த இத்திரைப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு விஜயகாந்தை பார்க்கச் செய்திருந்தார் இயக்குநர் விக்ரமன்.

உருட்டும் விழி, மிரட்டும் ஆக்ஷன், ஆர்பாட்டமான பஞ்ச் வசனங்கள், கால்களால் எதிரிகளைப் பந்தாடுவது போன்ற விஜயகாந்தின் வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, உயர்த்திக் கட்டிய வேட்டி, ம பொ சியை (ம.பொ.சிவஞானம்) நினைவு படுத்தும் மீசை, காமராஜரை நினைவு படுத்தும் கதர் சட்டை, கையில் குடை, காலில் தோல் செருப்பு சகிதமாய் ஒரு வெள்ளந்தியான, சாதுவான விஜயகாந்தாக தனது வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார் நடிகர் விஜயகாந்த்.

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையக் கருவாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில், அண்ணன் தம்பி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜயகாந்த். மேலும் இரண்டு தம்பிகள் கதாபாத்திரங்களில் பிரபு தேவா மற்றும் லிவிங்ஸ்டன் நடித்திருந்தனர். லிவிங்ஸ்டன் கதாபாத்திரத்திற்கு முதலில் படக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டிருந்தவர் நடிகர் நெப்போலியன். அவரால் நடிக்க இயலாமல் போக, பின் லிவிங்ஸ்டன் ஒப்பந்தமானார்.

தனது மூன்று தம்பிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு வெள்ளந்தி அண்ணன் கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிக்காட்டியிருந்த நடிகர் விஜயகாந்த்தின் வெள்ளித்திரைப் பயணத்தில் முத்திரைப் பதித்த வித்தியாசமான கலைச்சித்திரமாய் வந்ததுதான் இந்த “வானத்தைப் போல” திரைப்படம்.

2000ம் ஆண்டின் முதல் திரைப்படமாக பொங்கல் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம் திரையரங்குகளில் 250 நாள்களைக் கடந்து ஓடி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்ததோடு, விருவிருப்பான சண்டைக் காட்சிகளாலும், விவேகமிக்க வசனங்களாலும் மட்டுமே தனது ரசிகர்களை ஈர்த்திருந்த 'கேப்டன்' விஜயகாந்த் அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி, இப்படியும் நடித்து தன்னால் வெற்றித் திரைப்படங்களைத் தர இயலும் என நிரூபித்துக் காட்டிய ஒரு திரைப்படமாக வந்ததுதான் இந்த “வானத்தைப்போல”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !