விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை
மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' பட பாடல் வெளியீட்டுவிழாவில், படக்குழு தவிர, தமிழகத்தில் இருந்து இயக்குனர்கள் அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் விஜய் படத்தை இயக்கியவர்கள், விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல். கடந்த 10 ஆண்டுகளில் விஜயை வைத்து படம் இயக்கியவர்களில் பரதன்(பைரவா), வம்சி(வாரிசு), வெங்கட்பிரபு(தி கோட்) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் விஜய் நடிக்கும் கடைசி பட விழா என்றாலும் அவர் பெற்றோர்கள் தவிர, மற்ற குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. அவரின் நெருங்கிய நண்பர்கள் சிலரும் மிஸ்ஸிங்.
லோகேஷ் கனகராஜ்
ஜனநாயகன் விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பேசுகையில், ''இது விஜய் அண்ணாவின் கடைசிப் படம் என சொல்லும்போது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. மாஸ்டர் மற்றும் லியோ என்னோட கெரியரில் மிக முக்கியமான படங்கள். அந்த படங்களை எனக்கு கொடுத்ததற்காக நன்றி விஜய் அண்ணா. என் லியோவிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னால், லியோ 2 படத்துக்காக கால்ஷீட் கேட்பேன். அதற்கு அவர் 'பிளெடி ஸ்வீட்' என பதிலளிப்பார்.
நான் ஜனநாயகன் டீமில் உள்ள எல்லோருடனும் வேலை பார்த்திருக்கிறேன். ஜனநாயகன் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா. அப்படியே உங்க பெரிய பெரிய ஆசையும் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று அரசியல், முதல்வர் ஆசைக்கும் வாழ்த்து சொன்னார்.
அட்லி
இயக்குனர் அட்லி பேசுகையில், ''நான் அஸிஸ்டென்ட் டைரக்டராக இருக்கும்போதே என்னை உற்சாகப்படுத்தியவர். என்னை அழைத்து நீ ரொம்ப நல்லா வேலை பாக்குற, உங்கிட்ட எனக்கு எதாவது கதை வச்சிருக்கியா என கேட்டார். அந்த சமயத்தில் அவர் 50 படங்களுக்கு மேல் நடித்திருந்தார். எந்த ஒரு பெரிய நடிகரும் இதை செய்ய மாட்டார்கள். என்னுடைய சக்சஸ் எல்லாவற்றிற்கும் விஜய் அண்ணா தான் காரணம். நாம் எல்லாரும் நன்கு பிரார்த்தனை செய்தால், கடவுள் நாம் நினைப்பதை பரிசாக கொடுப்பார். தளபதியின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் நன்கு பிரார்த்தனை செய்வோம் என சொல்லிவிட்டு'', அங்கிருந்த ரேம்பில் ஓடிச் சென்று, எதிரே அமர்ந்திருந்த விஜய்யை கட்டிப்பிடித்தார் அட்லி. மேலும் விஜய் வேர் போன்றவர் என்ற குட்டி கதையும் சொன்னார்.
நெல்சன்
இயக்குனர் நெல்சன் பேசுகையில், “ஜனநாயகன் ஆடியோ லாஞ்சை பார்க்கும் போது அர்ஜெண்டினா உலக கோப்பை கால்பந்து பைனல்ஸ் மேட்சை பார்ப்பது போல் உள்ளது. நான் பீஸ்ட் படத்தில் செய்த தவறுக்காக அவருடன் மேலும் ஒரு படத்தில் பணியாற்ற ஆசைப்படுகிறேன். பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றபோது எனக்கு போன் போட்டு நான் ஓகேவாக இருக்கிறேனா என்று செக் பண்ணுவார் விஜய் சார்.
அவரிடமே உங்களுக்கு என் மீது கோபம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ஒரு படம் நம்முடைய நட்பை தீர்மானிக்காது என்று பதில் சொன்னார். அவருடன் நான் எப்போதும் நட்பில் இருப்பேன்'' என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில் ''அப்போது எனக்கு 21 வயது. 2 படங்கள்தான் பண்ணியிருந்தேன். ஆனாலும் என்னை நம்பி கத்தி படத்தை கொடுத்தார் விஜய். பின்னர், மாஸ்டர், பீஸ்ட், லியோ என எங்கள் கூட்டணி தொடர்ந்தது. அனைத்தும் விஜய் அன்பால் நடந்தது'' என்றார்.
நடிகர் சுனில் பேசுகையில், ''என் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட கூட்டத்தை பார்த்தது இல்லை. 1 லட்சம் பேர் சத்தம் உள்ள டெசிபல் இந்த விழா'' என்றார்.
நாசர்
நடிகர் நாசர் பேசுகையில், ''ஒரு விபத்தால் படுத்த படுக்கையாக இருந்த என் மகனை நடக்க வைத்தவர் விஜய். அவனும் இந்த விழாவுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி இருக்கிறான். அவருக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன். என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்பார் விஜய். அவர் முடிவை மாற்றமாட்டார். அப்படி மாற்றினால் விமர்சனம் வரும். ஆனாலும், நான் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்'' என்றார். மேலும், ''நடிகர் சங்க கட்டட பணிக்காக பணம் கேட்டபோது 1 கோடி நன்கொடை கொடுத்தார்'' என்றார்.
எச்.வினோத்
கடைசியில் இயக்குனர் வினோத் பேசுகையில், ''ஜனநாயகன் படம் ஒரு ரீமேக், அது எப்படி இருக்கும் என்ற பயமும் சந்தேகமும் நிறைய பேருக்கு இருக்கு. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கே, நடுவுல புகுந்து அடிச்சிரலாம்னு யோசிக்கிறங்வங்களுக்கு ஒன்னு சொல்றேன். ஐயா, இது தளபதி படம். உங்க மைண்ட்ல இருக்குற எண்ணங்களையெல்லாம் அழிச்சிட்டு, 100 சதவீதம் சுவாரஸ்யமான படத்தை பார்க்க போறோம் என்ற மனநிலையில் வாங்க. நீங்க ஆடிப்பாடி கொண்டாடவும் மொமண்ட்ஸ் இருக்கு, அமைதியா உட்கார்ந்த யோசிக்கவும் மொமண்ட்ஸ் இருக்கு. கடைசி 15 நிமிடம் தளபதிக்கு எமோஷனல் ஆன ட்ரிபியூட் காட்சிகள் உள்ளது என செய்திகள் பரவியது. ஆனால், அப்படியெல்லாம் அழுகுற மாதிரி எதுவும் இல்லை. இந்த படத்தின் முடிவில் ஒரு நம்பிக்கை இருக்கும். ஏனெனில், இது தளபதியோட முடிவு இல்லை, இதுதான் அவரின் ஆரம்பம்'' என்றார்.