புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில்
சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. அதையடுத்து அவரது நடிப்பில் புறநானூறு என்ற படத்தையும் இயக்க தயாரானார். ஆனால் திடீரென்று அந்த படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார். கதை பிடிக்காமல் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. இதனால் சூர்யா நடிக்க மறுத்த புறநானூறு கதையை பராசக்தி என்ற பெயரில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி இருக்கிறார் சுதா. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரப்போகிறது.
இந்த நிலையில், சுதா அளித்துள்ள ஒரு பேட்டியில் , புறநானூறு படத்தில் இருந்து சூர்யா வெளியேறியது ஏன்? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஒரு பதிலளித்துள்ளார். அதில், கொரோனா காலகட்டத்தில் இந்த கதையை தயார் செய்தேன். போனிலேயே கதையை சொன்னேன். கதையை கேட்டவர், அதில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டதால் அதையடுத்து புறநானூறு கதை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஆனால் திடீரென்று என்னை தொடர்பு கொண்ட சூர்யா, தொடர்ச்சியாக என்னால் இந்த படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தர முடியாது என்று கூறினார். ஆனால் தயாரிப்பாளரோ, தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த வேண்டும். அடுத்தடுத்து பிரேக் கொடுத்து படப்பிடிப்பு நடத்தினால் செலவு அதிகமாகும் என்று கூறினார். இந்த விஷயத்தில் சூர்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் புறநானூறு படத்தில் இருந்து வெளியேறினார் என்று கூறியுள்ளார் சுதா கெங்கரா.