'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர்
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து தற்போது அதன் மூன்றாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த இரண்டு பாகங்களும் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தற்போது ஹிந்தியிலும் இதன் மூன்றாம் பாகத்தை ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் 2ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அக்ஷய் கண்ணா 'திரிஷ்யம் 3'யில் இருந்து விலகுவதாக கூறி வெளியேறினார்.
மூன்றாம் பாகத்திலும் இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் நிலையில் இப்படி அவர் விலகியது அதிர்ச்சியை அளித்தது. எப்படியும் அவரை சமாதானப்படுத்தி படத்திற்கு கொண்டு வருவார்கள் என நினைத்த நிலையில் தற்போது திரிஷ்யம் 3 படத்தின் தயாரிப்பாளர் அக்ஷய் கண்ணாவின் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகர் ஜெய்தீப் அலாவத் என்கிற நடிகரை கதாபாத்திரத்திற்கு தற்போது தேர்வு செய்துள்ளார்கள். இவர் பாலிவுட்டில் சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பதுடன் கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' படத்தில் அவரது நண்பராக சலீம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்த திடீர் விலகலும் நடிகர் மாற்றம் குறித்தும் திரிஷ்யம் 3 ஹிந்தி தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் கூறுகையில், “இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் அக் ஷய் கண்ணா இந்தப்படத்தில் இருந்து வெளியேறியது எதிர்பாராதது. அவர் சமீபத்தில் வெளியான 'துரந்தர்' படத்தின் வெற்றியை தனது தலைக்கு ஏற்றிக்கொண்டு விட்டார். அந்த படத்தின் வெற்றியே தன்னால் தான் என்று எங்களிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் கூறி வருகிறார். திரிஷ்யம்-2வில் விக் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டவர் இந்த படத்தில் விக் வைத்து நடிக்க வேண்டும் என புதிய நிபந்தனை விதித்தார். அதன் பிறகு அவரே இந்த படத்தில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். நல்ல வேலையாக அவரை விட சிறந்த நடிகராக ஜெய்தீப் அலாவத் எங்களுக்கு கிடைத்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.