கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால்
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார், சஞ்சய் தத், போமன் இரானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தி ராஜா சாப்'. தமன் இசையமைத்துள்ளார். வருகிற சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜன., 9ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் உருவாகி இருந்தாலும் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியிடுகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் விழா ஐதராபாத்தில் நடந்தது.
அதில் பேசிய நடிகை நிதி அகர்வால், “இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான பிரபாஸ் உடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் அவருக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸ் அடிப்பதும், ஸ்டேடியத்தில் ஒரு சிக்ஸ் அடிப்பதும் வெவ்வேறு விஷயங்கள். அந்த அளவுக்கான ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ்.
'தி ராஜா சாப்' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த மாருதிக்கு என் மனமார்ந்த நன்றி. சப்தகிரி, VTV கணேஷ் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்தது. என் சக நடிகைகளான மாளவிகா மற்றும் ரித்தியுடன் பணியாற்றியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. 'தி ராஜா சாப்' படத்தை அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்” என்றார்.