தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை
சென்னை: தொழில் அதிபரிடம், அவரின் ஹோட்டலை குத்தகைக்கு விடுவது தொடர்பாக, 10 லட்சம் ரூபாய் வாங்கியதுடன், அவரின், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், 5 சவரன் நகையை மோசடி செய்து விட்டதாக, 'டிவி' நடிகை, அவரின் கணவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ்ராஜ், 39; தொழில் அதிபர். கரூரில், கோவை சாலை தெற்கு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். பணப் பிரச்னை காரணமாக, ஹோட்டலை குத்தகைக்கு விடுவது தொடர்பாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை அணுகி உள்ளார். அவர், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரை தினேஷ் ராஜுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
இந்த பாலாஜி, தினேஷ்ராஜை தொடர்பு கொண்டு, 'கரூரில் என் நண்பர் வடிவேல் உள்ளார். அவர் ஆறுமுகம் என்பவரிடம் பேசி, உங்கள் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்த ஏற்பாடு செய்துள்ளார்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, பாலாஜி, அவரின் நண்பர் புருஷோத்தமன், வடிவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோர், தினேஷ்ராஜ் ஹோட்டலுக்கு சென்று ஒப்பந்தம் போட்டு உள்ளனர்.
குத்தகைக்கான முன்பணமாக ஆறுமுகத்திடம் இருந்து, 10 லட்சம் ரூபாயை பாலாஜி பெற்றுள்ளார். அப்போது, தினேஷ்ராஜ் தன் நிதி நெருக்கடி குறித்து பாலாஜியிடம் மனம் விட்டு பேசி உள்ளார். அப்போது, சென்னைக்கு சென்றதும் உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறிய பாலாஜி, தினேஷ்ராஜின் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யு., - எக்ஸ் 3 காரையும், 5 சவரன் நகையையும் வாங்கி உள்ளார்.
கார் மற்றும் நகையை, சென்னையில் உள்ள தன் மனைவி ராணியிடம் காட்டி விட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதன்பின், அவரிடம் இருந்து சரியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பாலாஜியின் கார் ஓட்டுநர் பிரசாந்த் என்பவரை தொடர்பு கொண்டு தினேஷ்ராஜ் கேட்டுள்ளார். அப்போது தான், பாலாஜி, மனைவி ராணி மற்றும் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பாலாஜியை மீண்டும் தொடர்பு கொண்டு, பணம், நகை மற்றும் கார் குறித்து கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி ஜான்பாண்டியனிடம் முறையிட்ட போது, 'நீங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் தினேஷ்ராஜ் புகார் அளித்துள்ளார். பாலாஜி, ராணி மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், ராணி, 'டிவி' நடிகை என்பதும், 'அத்திப்பூக்கள், முன்ஜென்மம், வள்ளி மற்றும் ரோஜா' உள்ளிட்ட தொடர்களில் நடித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. கணவருடன் தலைமறைவாக இருக்கும் நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.