சீரியல் நடிகை நந்தினி தற்கொலை
பெங்களூரு: கர்நாடகவில், தமிழ் 'டிவி சீரியல்' நடிகை நந்தினி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம், கோட்டூரை சேர்ந்தவர் நந்தினி, 26. இவர் பெங்களூரு கெங்கேரியில், தங்கும் விடுதியில் வசித்து வந்தார். கன்னட, 'டிவி சீரியல்'களில் துணை நடிகையாக நடித்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தமிழில், 'கவுரி' என்ற சீரியலில், துர்கா - கனகா என இரு வேடங்களில் ஓராண்டாக நடித்து வந்தார். சில நாட்களுக்கு முன், சென்னையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். சமீபத்தில் பெங்களூரு திரும்பி விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கவுரி சீரியல் குழுவினர் நேற்று முன்தினம் நந்தினியை தொடர்பு கொண்டனர்; அவர் போனை எடுக்கவில்லை. எனவே, விடுதி மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அவர், நந்தினி அறைக்கு சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் நந்தினி சடலமாக கிடந்தார். கெங்கேரி போலீசார், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன், தாயாருக்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் உள்ள விபரங்களை கூற போலீசார் மறுத்து விட்டனர்.