புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி
பாலிவுட்டில் கடந்த 30 வருடங்களாக நடித்து வரும் நடிகர் சுனில் ஷெட்டி, ஜீவா இயக்கத்தில் வெளியான '12 பி' படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் அவர் தென்னிந்திய படங்களில் நடிக்கவில்லை. ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், 2020ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த 'தர்பார்' படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், புகையிலை விளம்பரத்தில் நடிப்பதற்காக தனக்கு ரூ.40 கோடி தர இருந்ததையும், அதனை ஏற்க மறுத்ததையும் பற்றி சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக என்னை அணுகினர். ரூ.40 கோடி தருவதாகக் கூறினர். பணத்தை காட்டினால் மயங்கிவிடுவேன் என நினைக்கிறீர்களா என கேட்டேன். அந்த பணம் தேவையாக இருந்தாலும், என் மகன், மகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் செய்ய மாட்டேன்.
அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்ற கொள்கைக்காக மறுத்துவிட்டேன். இப்போது அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க என்னை யாரும் அணுகுவதில்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் லட்சியங்களில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.