ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம்
கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.
கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி இந்த 173வது படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது. அப்போது படத்தை இயக்கப் போவது சுந்தர் சி என்று அறிவித்தார்கள். ஆனால், இசையமைப்பாளர் யார் என்பதைப் பற்றியோ, மற்ற நடிகர்கள் பற்றியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படத்திற்கு யார் இசையமைக்கலாம் என்பது குறித்து சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அதன்பின் அப்படத்திலிருந்து சுந்தர் சி விலகினார். இயக்குனர் மாறிய பிறகு மற்றவையும் மாறுவதுதான் வழக்கம்.
இந்நிலையில் இன்று படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்ற அறிவிப்பை வெளியிட்டு, கூடவே, படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் என்பதையும் அறிவித்துள்ளார்கள். சிபி சக்கரவர்த்தி இயக்குனராக அறிமுகமான 'டான்' படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். அப்படத்தின் பாடல்களும் ஹிட்டானது. அடுத்தும் ரஜினி 173 படத்தில் அனிருத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் சிபி.
அது மட்டுமல்ல, 'பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி, ஜெயிலர் 2' படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் 173வது படம் மூலம் ரஜினிகாந்த்துடன் 7வது முறையாக இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத்.
கடந்த 6 வருடங்களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 7 படங்களில் 5 படங்களுக்கு இசை அனிருத். 'அண்ணாத்தே' படத்திற்கு இமான், 'லால் சலாம்' படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தார்கள். தற்போது உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படம் ரஜினி - அனிருத் கூட்டணியின் 6வது படம். ரஜினி 173, இக் கூட்டணியின் 7வது படம். அடுத்தடுத்து அனிருத்திற்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார் ரஜினிகாந்த்.