தமிழில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் அவரது முதல் கணக்கை துவங்கி வைக்கும் விதமாக 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாக இருக்கிறது என்று தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் அவரது நடிப்பில் திடீரென 'காதல் கதை சொல்லவா' என்கிற படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இப்படி ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடித்தாரா என்கிற ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும் போஸ்டரில் விஜய் சேதுபதியுடன் நடிகர் ஜெயராமும் இருப்பதை பார்த்ததும் இது 2019ல் விஜய் சேதுபதி முதன்முறையாக மலையாளத்தில் நடித்த 'மார்க்கோனி மத்தாய்' படத்தின் தமிழ் டப்பிங்காக வெளியாகும் படம் என்பதை உடனே புரிந்து கொள்ள முடிகிறது.
ஜெயராம் தான் இந்த படத்தின் கதாநாயகன். விஜய் சேதுபதி சற்றே நீட்டிக்கப்பட்ட சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கதாநாயகிகளாக ஆத்மியா ராஜன் மற்றும் பூர்ணா நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் ரமேஷ் திலக் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சனில் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் விஜய் சேதுபதியின் 'காந்தி டாக்ஸ்' படத்திற்கு பிறகு ரிலீஸ் ஆகுமா அல்லது முன்கூட்டியே ரிலீஸ் ஆகுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.