'லெனின்' படத்தில் அகில் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ்
கடந்த வருடம் தெலுங்கு நடிகைகளில் நம்பிக்கை தரும் வரவாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் என்றால் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தான். கடந்த 2025ல் வெளியான 'கிங்டம், காந்தா' மற்றும் 'ஆந்திரா கிங் தாலுகா' என மூன்று படங்களிலும் கதாநாயகியாக நடித்த இவரது நடிப்பு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக பீரியட் படமாக தமிழ் சினிமாவை மையப்படுத்தி உருவாகியிருந்த காந்தா படத்தில் இவரது நடிப்பு விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் அகில் நடிப்பில் உருவாகி வரும் 'லெனின்' என்கிற படத்தில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். இதில் இவர் பாரதி என்கிற கதாபாத்திரத்தில் அகிலின் காதலியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திர போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீலீலா சில காட்சிகள் நடித்த நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்ட நிலையில் தான் அவருக்கு பதிலாக தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.