நடிகர் சீனிவாசனின் மறைவை ஒட்டி ரீ ரிலீஸ் ஆகும் 'உதயனானு தாரம்'
மலையாள திரை உலகில் சீனியர் குணச்சித்திர நடிகரான சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக காலமானார். மலையாளத் திரையுலகில் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் பல படங்களில் கதையின் நாயகனாகவும் ஒரு பக்கம் ரசிகர்களை வசீகரித்தாலும் இன்னொரு பக்கம் மோகன்லாலும் அவரும் இணைந்து நடித்த படங்கள் இப்போதும் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் படங்கள். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் கடந்த 2025ல் வெளியான 'உதயனானு தாரம்'.
இந்த படத்தின் திரைக்கதையை எழுதியதுடன் படத்தில் சினிமா நட்சத்திரமாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சீனிவாசன். படத்தில் கதாநாயகனாக சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழிலும் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் 'வெள்ளித்திரை' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சீனிவாசனின் மறைவை ஒட்டி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக இந்த 'உதயனானு தாரம்' படம் 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் ஜனவரி இறுதிக்குள் ரீ ரிலீஸ் செய்யப்பட தயாராகி வருகிறது.