உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராகவேந்திரா மண்டபம் உருவாக காரணமானவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த் பேச்சு

ராகவேந்திரா மண்டபம் உருவாக காரணமானவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த் பேச்சு


சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழா, சென்னை ஏ.வி.எம் பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல்ஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினி பேசியதாவது: சிந்தனையில், பேச்சில், செயலில் துாய்மையானவர் சரவணன்சார். நான் 1975ல் ஏவிஎம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு பெரியவர் சென்றதை பார்த்தேன். அவர் பின்னால் ஒருவர் வெள்ளை உடையில்
கை கட்டி சென்றார். அப்போது பெரியவர்தான் மெய்யப்ப செட்டியார். பின்னால் சென்றவர் அவர் மகன் சரவணன் என கமல்ஹாசன் சொன்னார்.

பின்னர், பலமுறை துாரத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். பின்னர், 1980களில் 'முரட்டுகாளை' படத்துக்காக மீண்டும் அவரை சந்தித்தேன். ஏவிஎம் செட்டியார் சொல்லி என்னை புக் பண்ணியதாக கேள்விப்பட்டேன். அந்த சமயத்தில் சரவணன் சாரை ஆபீசில் சந்தித்தேன். அவர் ஆபீஸ் மாதிரி அவ்வளவு சுத்தமாக வேறு எங்கும் பார்க்க முடியாது. நான் எத்தனையோ விஐபி ஆபீஸ் சென்று இருக்கிறேன். அவர் ஆபீஸ் மாதிரி பார்த்தது இல்லை. அவரிடம் 11 படம் பண்ணியிருக்கிறேன். அதுல 9 படம் எஸ்.பி.முத்துராமன் சார் படம். அந்த படங்களில் பக்கா கதை, ஜனங்கள் விரும்பும் விஷயங்கள் இருக்கும். அதை சரவணன் சார் ரெடி பண்ணுவார்.

திரைக்கதை, யார் நடிக்கணும், இசை, எடிட்டிங், ரசிகர்கள் விருப்பம் என அவர் பங்கு இருக்கும். மகாபாரதத்துல கண்ணன் உதவுற மாதிரி, எந்த ஆயுதமும் ஏந்தாமல் ஜெயிக்க வெச்ச மாதிரி, ஒரு படத்தின் வெற்றிக்குபின் சரவணன் சார் பங்கு இருக்கும். அவர் ஆபீசில் இருந்து பக்காவாக பிளான் பண்ணுவார். படத்தை ஜெயிக்க வைக்க உழைப்பார். 'எஜமான்' படம் பண்ணும்போது அந்த படத்தை அவரின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பண்ணலை. ஆர்.வி.உதயகுமார் இயக்கினாரு. ஆனாலும், அவருக்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் தனி ஆபீஸ் கொடுத்து தினமும் வரணும்னு சொன்னவர் சரவணன்சார், அது நட்புக்கு இலக்கணம்.

ராகவேந்திரா மண்டபம்

எனக்கு தனிப்பட்ட முறையில் பல நல்லது செய்தார். கோடம்பாக்கத்துல எனக்கு இடம் இருந்தது. அதை சும்மா விடக்கூடாது என சொல்லி, அவரே பிளான் பண்ணி கொடுத்து கட்ட வைத்ததுதான் ராகவேந்திரா திருமணம் மண்டபம். போயஸ் கார்டன்ல என் வீட்டுக்கு பக்கத்துல இடம் இருந்தது. நான் சினிமாகாரன் என்பதால் அதற்கு பத்து மடங்கு விலை சொன்னாங்க. அதனால் நான் சுவர் கட்டி வைத்து இருந்தேன்.

என் வீட்டுக்கு வந்த சரவணன் சார், அந்த இடத்தை அதிக விலை என்றால் கூட வாங்கிவிடுங்க. மற்றவர்கள் வந்தால் பிரச்னை, நீங்க வருத்தப்படுவீங்க என்றார். நான் அதை செய்தேன். சிவாஜிக்குபின் ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க, அது உடம்பு, மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைபிடிக்கிறேன். அவர் ரியல் ஜென்டில்மேன். அனைத்து அரசியல்வாதிகளிடமும் நட்பாக இருந்தார். எம்ஜிஆர் அவரை ஷெரீப் ஆக்கினார். ஜெயலலிதாவுக்கும் அவர் மீது மரியாதை.

சிவாஜி படம் அரசியல்வாதிகளுக்கு எதிரான படம். ஆனாலும், கலைஞர் அந்த வெற்றி விழாவுக்கு வந்து விருது கொடுத்தார். அனைத்து அரசியல்வாதிகளிடம் அவர் அன்பாக இருந்தார். அதெல்லாம் சரவணன்சாருக்காக. இவ்வளவு வேலையை விட்டு முதல்வர் ஸ்டாலின் இங்கே வந்து இருக்கிறார். தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம். அந்த சமயத்துல சிஎம் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார். அது அவர் அன்பை காட்டுகிறது. சரவணன்சார் எப்படி வாழ்ந்தார் என்பது தெரிகிறது.

அசையும் சொத்து, அசையா சொத்து என்பார்கள். அசையா சொத்துக்கு விலை ஜாஸ்தி. நம் மீது அக்கறை கொண்டவர்கள், நம்மை விரும்புகிறவர்கள் அசையா சொத்து. பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் கலைஞர், சரவணன் என பலர் அப்படி இருந்தார்கள். நம் மீது அன்பு கொண்டவர்களை காலம் சீக்கிரம் கொண்டு போய்விடுகிறது. பேர், புகழ், குழந்தைகள், சொத்து எல்லாம் இருந்தாலும், நல்ல மனிதர்கள் போகும்போது அனாதையான பீல் வருது. சரவணன் சார் கிரேட் மேன். இவ்வாறு ரஜினி பேசினார்.

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: நான் ஏ.வி.எம்.சரவணன்சாரிடம் முதலாளி என்பதை தாண்டி அன்பாக பேசுவேன். ஏ.வி.எம் குடும்பத்துடன் ஒட்டிக்கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அன்பு, மரியாதைக்காக இந்த விழாவுக்காக முதல்வர் உட்பட பலர் வந்தனர். ஏ.வி.எம் இன்ஸ்டியூட்டில் நான் படித்தது பெருமை. அந்த படிப்பு இன்றுவரை கை கொடுக்கிறது. அதில் எனக்கு மூத்தவர் இயக்குனர் எஸ்பி முத்துராமன். இந்த பள்ளியில் இருந்து வந்தவர்கள், கற்றுக்கொடுப்பவர்களாக மாறிவிட்டனர்.

நான் தவறு செய்யும்போது சத்தமாக சொல்லாமல், நல்லது செய்யும்போது தோளில் துாக்கி கொண்டாடிவர் சரவணன்சார். நான் 16 வயதில் உதவி இயக்குனராக சேர்ந்தபோது வாங்க போங்க என மரியாதையாக அழைத்தனர். நீங்களும் மற்றவர்களிடம் மரியாதையாக பேசுங்க என்றார். அதை நான் கடைபிடிக்கிறேன். ஏவிஎம் செட்டியார் இல்லாத குறையை சரவணன் சார் போக்கியவர். அவர் நல்ல முதலாளியும் கூட. பென்சன் திட்டத்தை சிறப்பாக கொண்டு வந்த முதல்வருக்கு இந்த அரங்கில் நன்றி சொல்கிறேன். காந்தியார் பார்த்த முதல் படத்தில் ஏவிஎம் பெயர் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Edwin Jebaraj T, Tenkasi
2026-01-04 13:52:40

இந்த மண்டபம் கட்டுமானத்தின் போது ஏழை எளிய மக்களுக்காக கட்டப்படும் மண்டபமாக விளம்பரப்படுத்தப் பட்டது ஏன் ரஜினிகாந்தே இதை பல பேட்டிகளில் அப்போது உறுதிப் படுத்தினார் ஆனால் நடந்ததோ நேர் எதிராக, மேல் தட்டு மக்கள் மட்டுமே நெருங்கக் கூடிய இடமாக மாறிவிட்டது.