ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம்
திருவாரூர் தங்கராசு எழுதிய நாடகம் 'ரத்தக்கண்ணீர்'. மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கி கிடக்கும் ஒருவன் தன் ஆணவத்தால், அகங்காரத்தால் தமிழ் கலாச்சாரத்தை கிண்டல் செய்து என்ன கதி ஆகிறான் என்பதுதான் நாடகத்தின் ஒன் லைன். இந்த நாடகத்தை எம்.ஆர்.ராதா பலமுறை மேடை ஏற்றினார். நாடகத்தின் மூலம் அன்றாட அரசியலை கடுமையாக விமர்சித்தார்.
1954ம் ஆண்டு திரைப்படமானது 'ரத்தக்கண்ணீர்'. நாடகத்தில் நடித்த எம்.ஆர்.ராதாவே சினிமாவிலும் நடித்தார். அவருடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, சந்திரபாபு, எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி உள்ளிட்ட பலர் நடித்தனர். நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் பெருமாள் முதலியார் தயாரித்தார்.
ரத்தக்கண்ணீர் திரைப்படமான பிறகும் எம்.ஆர்.ராதா நாடகமாக தொடர்ந்து நடத்தி வந்தார். அவருக்கு பிறகு அவரது வாரிசுகளும் தொடர்ந்தனர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய படமாக இப்போதும் 'ரத்தக்கண்ணீர்' திகழ்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு தற்போது கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், இந்திய திரைப்பட பாரம்பரியத்தை வருங்கால சந்ததிக்கு பாதுகாத்து கொண்டு செல்லுதல், திரைப்படங்களை வகைப்படுத்தி, ஆவணப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு செயல்படுகிறது.
இந்த காப்பகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட கதைக்கான கையெழுத்து பிரதிகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.