வாசகர்கள் கருத்துகள் (1)
போய் பகவத் கேசரி பாருங்கப்பா அவர் டான்ஸ் மட்டும்தான் ஆட தெரியாது ஆனா நல்ல நடிப்பார் ஆனா அணிலுக்கு அது வரவே வராது
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் இந்த வாரம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இப்படத்தின் முன்பதிவு ஆரம்பமானாலும் இந்தியாவில் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை. ஒரு சில தியேட்டர்களில் ரசிகர்களின் காட்சிகளுக்காக முன்பதிவு பேசி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கான தியேட்டர்களுடனான ஒப்பந்தம் இன்னும் முழுமையாகப் போடப்படவில்லையாம். வினியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து 75 சதவீத பங்குத் தொகை கேட்பதால்தான் பல தியேட்டர்கள் ஒப்பந்தம் போட விரும்பவில்லை என்று தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அதேசமயம், 'பராசக்தி' படத்திற்கு 60 சதவீதம், 65 சதவீதம் மட்டுமே கேட்பதால் அந்தப் படத்தைத் திரையிட பலரும் முன் வருகிறார்களாம்.
இதற்கு முன்பு விஜய் நடித்து 2024ல் வெளியான 'தி கோட்' படத்திற்கு 75 சதவீத பங்குத் தொகையைத் தர தியேட்டர்கள் சம்மதித்துள்ளன. அதனால், அதே பங்குத் தொகையைத் தற்போது 'ஜனநாயகன்' தரப்பில் கேட்பதாகவும், அதற்கு தியேட்டர்கள் சம்மதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
தற்போது தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக ரூ.190 உள்ளது. அதில் ரூ.42 வரியாகப் போய்விடுகிறது. எஞ்சியுள்ள ரூ.148ல் தான் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும். 75 சதவீதம் வினியோகஸ்தர்களுக்கும், மீதி 25 சதவீதம் தியேட்டர்களுக்கும் என்றால் வினியோகஸ்தர்களுக்கு ரூ.111ம், தியேட்டர்களுக்கு ரூ.37ம் பங்காகக் கிடைக்கும்.
அந்த ரூ.37ல் தியேட்டர் நிர்வாகம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் போக தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என தியேட்டர்கள் தரப்பில் கேட்கிறார்கள்.
அதே சமயம் 'பராசக்தி' படத்திற்கு 60 அல்லது 65 சதவீதம் சிங்கிள் தியேட்டர்களுக்கும், 50 சதவீதம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும் என ஒப்பந்தம் போடுகிறார்களாம்.
'ஜனநாயகன்' படத்திற்கான கேரளா தியேட்டர்களுக்கு மட்டும் 60 சதவீதம் மட்டுமே நிர்ணம் செய்துள்ளார்களாம். அங்கு தியேட்டர்காரர்களிடம் இருக்கும் ஒற்றுமையே அதற்குக் காரணம் என்கிறார்கள். மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தாலும் அந்த சதவீதத்தை மாற்றவே முடியாதாம்.
அதோடு, தமிழகத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு மட்டும் 60 சதவீதம் என 'ஜனநாயகன்' படத்திற்கு ஒப்பந்தம் போடுவதாகவும் சொல்கிறார்கள்.
'ஜனநாயகன்' தரப்பில் வினியோகஸ்தர்கள் சொல்லும் சதவீதத்திற்கு சம்மதம் தெரிவித்து சில தியேட்டர்காரர்கள் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம். எப்படியும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் அதிகம் வருவார்கள். இதர கேண்டீன் வருவாய் மூலம் சதவீதத்தில் இழக்கும் வருவாயை சரிக்கட்டலாம் என நினைக்கிறார்களாம்.
இதனிடையே, பெங்களூரு மாநகரில் பல தியேட்டர்களில் 'ஜனநாயகன்' படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் ஆன்லைன் தளங்களிலேயே ரூ.1000 மற்றும் ரூ.800க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் அதிகபட்சமாக ரூ.350க்கு முன்பதிவு செய்யப்படுகிறது.
தமிழகத்தை விட கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளாவில் ஆகிய மாநிலங்களில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் அதிகமாகவே உள்ளன.
போய் பகவத் கேசரி பாருங்கப்பா அவர் டான்ஸ் மட்டும்தான் ஆட தெரியாது ஆனா நல்ல நடிப்பார் ஆனா அணிலுக்கு அது வரவே வராது