கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி
மறைந்த பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் நாயர், ‛மகாபாரதத்தை' தழுவி எழுதிய ரண்டமூழம் என்கிற நாவல் மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படமாக உருவாக இருப்பதாக கடந்த 2016ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியானது. பீமனை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்த இந்த கதையை துபாயை சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர் ஷெட்டி என்பவர் தயாரிப்பதாகவும் ஏற்கனவே மோகன்லாலை வைத்து ஒடியன் படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு துவங்க காலதாமதம் ஆனது, கதாசிரியருடன் ஏற்பட்ட பிரச்சனை, கதையை திரும்ப தருமாறு கதாசிரியர் நீதிமன்றம் சென்றது, அதன் பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கல் என இந்த அறிவிப்பு வெளியான இரண்டு வருட காலகட்டத்திலேயே இந்தப் படம் கைவிடப்பட்டது. ஒருவேளை எம்.டி வாசுதேவன் நாயர் கதை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் சுமூகமாக கையாண்டிருந்தால் இந்த படம் நிறைவேறி இருக்கலாம் என்றும் அப்போது சொல்லப்பட்டது.
தற்போது எம்.டி வாசுதேவன் நாயர் மறைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த ரெண்டமூழம் கதையை படமாக எடுக்க இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஆர்வம் காட்டி வருகிறாராம். இது தொடர்பாக எம்.டி வாசுதேவன் குடும்பத்தாரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே காந்தாரா படத்தின் இரண்டு பாகங்களை புராண வரலாற்று பின்னணியில் இயக்கிய அனுபவத்தில் இந்த பீமன் கதையையும் இயக்கும் முடிவோடு தான் ரிஷப் ஷெட்டி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.