20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி
நடிகை ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி ஒரு நடிகராக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நடித்து வருகிறார். தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடிவரும் அவருக்கு 'திரெளபதி, ருத்ர தாண்டவம்' ஆகிய படங்கள் ஓரளவு அங்கீகாரம் கொடுத்தன. இந்த நிலையில் தற்போது 'திரெளபதி 2' படத்தில் நடித்து முடித்து விட்ட ரிச்சர்ட் ரிஷி அடுத்ததாக இயக்குனர் வின்சென்ட் செல்வா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் 'சுப்பிரமணி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருடன் நடிகர் நட்டியும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.
ஆச்சரியமாக ஒரு ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி நடிகராக மாறியது உதயபானு மகேஸ்வரன் இயக்கிய 'நாளை' என்கிற திரைப்படத்தில் தான். இந்த நாளை படத்திலும் நட்டி, ரிச்சர்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில் 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் வின்சென்ட் செல்வாவிடம் உதவியாளராக ஒரு காலத்தில் பணியாற்றிய இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன் படப்பிடிப்பின் போது ஒரு இணை இயக்குனராகவும் தனது குருவுக்கு உதவியாக பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.