'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி
விஜய் நடித்த 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்களின் டிக்கெட் புக்கிங் நிலவரத்தில் குழப்ப நிலை நீடிப்பதாக தகவல். இரண்டு படங்களுமே இன்று காலை வரை சென்சார் சான்றிதழ் வாங்கவில்லை. இன்று மதியத்துக்குள் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும். இரண்டு படங்களுக்கும் யு ஏ சான்றிதழ். இதில் 'ஜனநாயகன்' படம் 3 மணி நேரம் 3 நிமிடம் ஓடுகிறது என்று கூறப்படுகிறது. சென்சார் சான்றிதழ் வராத காரணத்தால் பெரும்பாலான இடங்களில் புக்கிங் தொடங்கப்படவில்லை. ஆனால் சில ஊர்களில் மட்டும் ஜனநாயகன் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகாரப்பூர்வமாக எங்கும் தொடங்கப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள், த.வெ.க தொண்டர்கள் தவித்து வருகிறார்கள். பராசக்தி விஷயத்திலும் டிக்கெட் புக்கிங் தொடங்கியதா? இல்லையா என்ற குழப்ப நிலையே நீடிக்கிறது. தவிர, ஜனநாயகன் படத்துக்கு 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை பங்கு வினியோகஸ்தர்கள் பங்கு கேட்பதால், பல ஊர்களில் உள்ள தியேட்டர் அதிபர்கள் தயக்கத்தில் இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் இந்த பிரச்னை முடிவுக்கு வரும் என தெரிகிறது.
இன்று மாலைக்குள் இந்த இரண்டு படங்களின் புக்கிங் நிலவரம் வெற்றிகரமாக முடித்து, அடுத்த ஒரு வாரத்துக்கு டிக்கெட் புக்கிங் நிலை திருப்திகரமாக இருக்க வாய்ப்பு என தியேட்டர் அதிபர்கள் சொல்கிறார்கள். பராசக்தி குழுவினர் படத்தை விளம்பரப்படுத்த நாளை கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல இருக்கிறார்கள். சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்ததால்தான் இவ்வளவு குழப்பம் என்றும் கூறப்படுகிறது.