சின்ன படங்களுக்கு எட்டாக்கனியாகிறதா அனிருத் இசை?
தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவர் அனிருத். இப்போது தெலுங்கு படத்துக்கு இசையமைத்து வருகிறார். ஹிந்தியில் இவர் இசையமைத்த, ஷாருக்கானின் 'ஜவான்' பெரிய ஹிட். இப்போது இவர் இசையமைத்த 'ஜனநாயகன்' பொங்கலுக்கு ரிலீஸ். அடுத்து 'எல்ஐகே, அரசன், ஜெயிலர்2, டிசி', ரஜினியின் 173வது படம் என அவர் கைவசம் நிறைய பெரிய படங்கள் உள்ளன.
அனிருத் இசை சிறப்பு என்றாலும், அவர் மீது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வேறு மாதிரி புகார் சொல்கிறார்கள். அவர் 13 கோடி முதல் 15 கோடி வரை சம்பளம் கேட்கிறார். தவிர, சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்கள் படங்கள் என்றால் இசையமைக்க மறுக்கிறார். பெரிய ஸ்டார், பெரிய பட்ஜெட், பெரிய இயக்குனர் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், இமான், தமன் போன்றவர்கள் இப்படி பாகுபாடு பார்த்தது இல்லை. அனிருத் பாணி வித்தியாசமாக இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால், அனிருத் தரப்போ, அவர் மிகக்குறைவான படங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார். அதனால், முன்னணி இயக்குனர், பெரிய ஸ்டோர் படங்களுக்கு செல்கிறார். அனிருத் இசையிலும் 'வணக்கம் சென்னை, எதிர்நீச்சல்' போன்ற பல சின்ன படங்கள் வந்துள்ளன. அவர் பாகுபாடு பார்ப்பது இல்லை, உண்மையில் அதற்காக அவருக்கு நேரம் இல்லை.'' என்கிறார்கள்.