பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம்
சோ ராமராமி நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். ஆரம்ப காலத்தில் சில படங்களில் நாயகனாக நடித்தார். அவர் நடித்த 'துக்ளக்' படம் தமிழ் சினிமாவில் முக்கியமான அரசியல் நையாண்டி படமாக இன்றைக்கும் பார்க்கப்படுகிறது.
பல வருட இடைவெளிக்கு பிறகு 1987ம் ஆண்டு 'காணி நிலம் வேண்டும்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இதுவும் அரசியல் நையாண்டி படம்தான். இந்த படத்தின் கதையை சோ எழுதினார், அருண்மொழி என்பவர் இயக்கினார். சோவுடன் குட்டி பத்மினி, வாத்தியார் ராமன் உள்ளிட்ட பலர் நடித்தனர். சோ இதில் அறிவரசன் என்ற அமைச்சராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் நடித்தார். அன்றைக்கு இருந்த அரசியலை மிக கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டார்கள். பின்னர் நீதிமன்றத்தின் மூலம் மேல்முறையீடு செய்து மும்பையில் மறு தணிக்கை செய்யப்பட்டு 18 கட்டுகளுடன் படம் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்பை பெறவில்லை. சோ நடித்த படங்களில் தணிக்கையில் சிக்கிய படம் இது மட்டும்தான்.