மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை
தெலுங்கில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தும் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ஓரளவு பிரபலமானவர் நடிகை அனசுயா பரத்வாஜ். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ராசியை இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகளில் கிண்டல் அடிக்கும் விதமாக கமெண்ட் அடித்து பேசி இருந்தார். இந்த ராசி வேறு யாரும் இல்லை, தமிழில் விஜய்யின் 'லவ் டுடே, பிரியம், கங்கா கௌரி' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான். இந்த சம்பவம் நடைபெற்று மூன்று வருடங்கள் ஆன நிலையில் திடீரென அனசுயா பரத்வாஜ் பேசிய அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அனசுயா பரத்வாஜ், “டியர் ராசி காரு.. உங்களிடம் என்னுடைய உண்மையான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சரியாக தெலுங்கு பேச தெரியாமல் உங்களுடைய பெயரை உச்சரித்து இரட்டை அர்த்த வசனங்களை நான் பேசியது தவறு தான். அந்த நேரத்தில் அந்த விழா ஏற்பாட்டினை செய்தவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி தான் நடந்து கொண்டேன். ஆனால் இப்போது என்னால் அப்படி பண்ண முடியாது. அது ஒரு மிகப்பெரிய தவறு. என்னுடைய மன்னிப்பை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. இத்துடன் இதை முடித்துக் கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
காலம் ஒரு நடிகையை எவ்வளவு பக்குவப்படுத்தி இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் அவர் மனமுவந்து மன்னிப்பு கேட்டதற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்