ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார்
மலையாள திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் நடிகர் புன்னப்புரா அப்பச்சன். 77 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு மேரிக்குட்டி என்கிற மனைவியும் ஆண்டனி ஜெரோம், ஆலிஸ் அல்போன்ஸ் என்கிற மகன்களும் உள்ளனர்.
ஆரம்பத்தில் எல்ஐசி ஏஜென்ட் ஆக இருந்து சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 1000 படங்கள் வரை நடித்துவிட்டார் புன்னப்புரா அப்பச்சன். 1970களில் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் பிரேம் நசீர், சத்யன் ஆகியோர் தொடங்கி சமீபத்திய இளம் நடிகர்களான நிவின்பாலி தியான் சீனிவாசன் உள்ளிட்ட பலரது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த 'மதிலுகள், சங்கம், தி கிங், கதுவா' உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
அதுமட்டுமல்ல ஹிந்தியில் திலீப் குமார் நடித்த 'துனியா' படத்தில் அவரை கைது செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்த இவர், தமிழில் விஜய் நடித்த 'சுறா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக சுரேஷ் கோபி நடித்த 'ஒத்தக்கொம்பன்' படத்தில் இவர் நடித்தார். மேலும் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ஐந்து படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.