'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் நேற்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று நீதிமன்ற விசாரணையில் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத காரணத்தால், தயாரிப்பு நிறுவனத்திற்கு மன அழுத்தம், நிதி இழப்பு, புகழுக்குக் களங்கம் என சரி செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்காக சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 5000 திரைகளில் படத்தைத் திரையிட திட்டமிட்டுள்ளது,” என்று வாதிட்டுள்ளார்.
தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞரே படத்தின் பட்ஜெட் 500 கோடி என்று தெரிவித்துள்ளதால் படத்தின் பட்ஜெட் குறித்த சந்தேகங்களுக்கு ரசிகர்களுக்கு விடை கிடைத்துள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கான பட்ஜெட் என்ன என்பதை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் வெளிப்படுத்தாது. அதிலும் இந்தப் படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் வாங்கினார், 300 கோடி சம்பளம் வாங்கினார் என படம் ஆரம்பித்த நாளிலிருந்தே செய்திகள் பரவி வந்தன.
இப்போது 500 கோடி பட்ஜெட் என்றால் அப்படத்தின் தியேட்டர் வியாபாரத்தால் நடந்துள்ள அதிகபட்ச தொகை, படம் வெளியான பின்பு கிடைக்க வேண்டிய வசூல் ஆகியவை அனைத்துமே அதிக அளவில் நடக்க வேண்டியதாக இருக்கும். அப்போதுதான் படத்திற்கான லாபம் கிடைக்கும்.