உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்”

பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்”


திரையுலகப் பிரவேசம் என்பது திறமை படைத்த எல்லோருக்கும் கிடைத்துவிடக் கூடிய ஒரு எளிதான ஊடகப் பணியன்று. அதற்கான முயற்சியில் இறங்கி, இன்று வரை போராடிக் கொண்டிருக்கும் திறமைமிகு இளைஞர் இளைஞிகளின் எண்ணிக்கை ஏராளம்! ஏராளம்!! அவற்றில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அரிய வாய்ப்பு கிடைத்து, அதையும் சரியாகப் பயன்படுத்தி, மேலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு, கடுமையான உழைப்பைத் தந்தால் மட்டுமே திரைவானில் நட்சத்திங்களாக அவர்களால் மின்ன முடியும்.

அப்படி தீவிர முயற்சி மேற்கொண்டு, கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், கடுமையாக உழைத்து, தங்களது திறமையை மேலும் மெருகேற்றிக் கொண்டவர்கள்தான் இன்று நாம் திரையில் கண்டு மகிழ்ந்துக் கொண்டிருக்கின்ற பல உச்ச நட்சத்திரங்களும், இன்னபிற நட்சத்திரங்களான திரைப் பிரபலங்களும். அந்த வரிசையில் ஒரே திரைப்படத்தில் அறிமுகமான மூன்று முக்கிய நடிகர்களின் திரைப் பிரவேசத்தைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.

1977ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் “பட்டினப்பிரவேசம்”. கரிமங்கலம் என்ற ஒரு சிறு கிராமத்திலிருந்து நகரத்தில் வாழ விரும்பி, பிழைப்புத் தேடி சென்னையின் புறநகர்ப் பகுதியான பழவந்தாங்கலுக்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களும், போராட்டமும்தான் இத்திரைப்படத்தின் ஒன் லைன். இயக்குநர் விசுவின் மேடை நாடகமான இக்கதை, இயக்குநர் கே பாலசந்தரின் கை வண்ணத்தில் திரைவடிவம் பெற்றது.

இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகர்கள் சரத்பாபு, டெல்லி கணேஷ், சிவசந்திரன் ஆகியோர் திரை நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர். இயக்குநர் கே பாலசந்தரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர்கள், தங்களது கடின உழைப்பு மற்றும் தீவிர முயற்சியின் காரணமாக பின்னாளில் தென்னிந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத திரை ஆளுமைகளாக ஜொலித்தனர்.

“திசை மாறிய பறவைகள்”, “நதியைத் தேடிவந்த கடல்”, “கண்ணில் தெரியும் கதைகள்”, “உச்சக்கட்டம்” போன்ற பல படங்களில் முன்னணி நாயகனாக நடித்ததோடு, “நிழல் நிஜமாகிறது”, “முள்ளும் மலரும்”, “சலங்கை ஒலி”, “நெற்றிக்கண்”, “சட்டம்”, “வேலைக்காரன்”, “முத்து” போன்ற பல ரஜினி, கமல் திரைப்படங்களில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் ஒரு தனித்துவமிக்க நடிகராக பார்க்கப்பட்டவராக உயர்ந்தவர்தான் நடிகர் சரத்பாபு.

இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவரும், டெல்லி தக்ஷிண பாரத நாடக சபாவின் உறுப்பினருமாக அறியப்பட்டவர்தான் நடிகர் டெல்லி கணேஷ். கே பாலசந்தரின் “பட்டினப்பிரவேசம்” திரைப்படத்தின் மூலமாக ஒரு நடிகராக வெள்ளித்திரைக்கு அறிமுகமான இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி தமிழ் திரையுலகில் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருந்தவர் இவர். குறிப்பாக “சிந்து பைரவி”, “நாயகன்”, “மைக்கேல் மதன காம ராஜன்”, “ஆஹா!”, “அவ்வை சண்முகி” என பல திரைப்படங்களை இவரது பண்பட்ட நடிப்பிற்கு உதாரணங்களாக சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு நடிகராக, திரைக்கதாசிரியராக, இயக்குநராக என பல்வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்ட ஒரு தேர்ந்த திரைக்கலைஞராகப் பார்க்கப்படுபவர்தான் நடிகர் சிவசந்திரன். “வான் நிலா நிலா அல்ல”, “உறவுகள் தொடர்கதை”, “மனதில் என்ன நினைவுகளோ”, போன்ற காலத்தால் அழியா காவியப் பாடல்களுக்கு வாயசைத்து நடித்திருந்த இவரையும் இந்த வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய ஒரு திரைப்படம்தான் இந்தப் “பட்டினப்பிரவேசம்”. இப்படி முத்தான மூன்று திரைக்கலைஞர்களை ஒருசேர அறிமுகம் செய்து வைத்த இத்திரைப்படத்தின் கதை, பாடல்கள், கலைஞர்களின் பங்களிப்பு என அனைத்தும் சிறப்பாக இருந்தும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !