மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி
இயக்குனர் பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கூடுதலாக சினிமாவில் 50 ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடி வருகிறார். அதை வெட்டி அவர் அளித்த பேட்டியில், ''சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். இப்பொழுது மீண்டும் படம் மற்றும் வெப் சீரியஸ் இயக்க உள்ளேன்'' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ''சினிமாவுக்கு வர நண்பர்கள் உதவினார்கள். அப்புறம் பாரதிராஜாவிடம் சேர்ந்தேன். '16 வயதினிலே' படத்தில் என் பெயர் வந்தது. அந்த படத்தின் வெற்றி பலருக்கு மாற்றத்தை கொண்டு வந்தது. அதில் நானும் ஒருவன். சமீபத்தில் கமலிடம் பேசியபோது கூட இதை குறிப்பிட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்தேன். பின்னர் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனேன். அடுத்து ஹீரோ, இயக்குனர் ஆனேன்.
'கிழக்கே போகும் ரயில்' படத்தில் தற்செயலாக ஒரு கேரக்டரில், அதுவும் சின்ன ரோலில் நடித்தேன். அதை பார்த்த என் அம்மா நீ ஏன் ஹீரோ ஆகக்கூடாதுனு கேட்டார். அதுக்கு தனி திறமை வேணும்னு சொன்னேன். நீ ஹீரோ ஆவாய். உன் இயக்குனர் நடிக்க வைப்பார் என்றார். அவர் சொன்னது 'புதிய வார்ப்புகள்' படத்தில் நடந்தது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனக்கு பின், என் பெயரை காப்பாற்றும் வகையில் பாக்யராஜ் வருவார் என, இயக்குனர் பாரதிராஜா சொன்னார்,'' என்று மலரும் நினைவுகளை பாக்யராஜ் சொன்னார்.