உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'பராசக்தி'யை தங்கமாக மின்ன வைத்த மதுரை தியேட்டர்

பிளாஷ்பேக்: 'பராசக்தி'யை தங்கமாக மின்ன வைத்த மதுரை தியேட்டர்


புராண படங்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் 1952ம் ஆண்டு வெளிவந்தது சமூக பிரச்னைகள் பற்றி பேசிய படம் 'பராசக்தி'. அப்போதல்லாம் எந்த படமாக இருந்தாலும் சென்னையில் 3 முதல் 5 தியேட்டர்களிலும், மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் 2 அல்லது 3 தியேட்டர்களிலும் வெளியாகும். மற்ற ஊர்களில் அடுத்த ரவுண்டில்தான் படங்கள் வெளியாகும்.

இப்படியான சூழ்நிலையில்தான் 1952ம் ஆண்டு தீபாவளி அன்று 'பராசக்தி' வெளியானது. இதே ஆண்டில் மதுரையின் முக்கியமான பகுதியான மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் அந்தக் காலத்திலேயே பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிச்சைமுத்து என்பவர் ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கமான 'தங்கம்' தியேட்டரை கட்டி முடித்திருந்தார்.

சுமார் 52,000 சதுர அடி பரப்பளவு, 2,563 இருக்கைகள் என பிரம்மாண்டமாக உருவான இந்தத் தியேட்டரை, எப்படியாவது அந்த தீபாவளிக்குத் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பிச்சைமுத்து இருந்தார். தங்கம் தியேட்டரின் முதல் படமாக எதைத் திரையிடுவது என்பதில் பிச்சைமுத்துவுக்குப் பெரிய குழப்பம் இருந்தது. அவர் தேர்ந்தெடுத்த படம் 'பராசக்தி'.

சுற்றமும் நட்பும் அவரை எச்சரித்தன. புராணப் படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த காலத்தில், கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்யும் ஒரு சமூகப் படத்தை வெளியிடுவது தற்கொலைக்குச் சமம். கடைசி வரை தியேட்டருக்கு கடவுள் அருள் கிடைக்காது என்று மிரட்டினார்கள். மேலும், சென்சார் சர்ச்சையில் சிக்கியருந்த படம் வெளியாகுமா என்பதே சந்தேகம் வேறு இருந்தது.

இதையெல்லாம் தாண்டி தங்கம் தியேட்டரில் முதல் படமாக 'பராசக்தி' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ஒரே படத்தின் மூலம் தென் தமிழ்நாடு முழுக்க புகழ்பெற்றது 'தங்கம்' தியேட்டர். மதுரைக்கு வரும் தென் தமிழ்நாட்டு மக்கள், அந்த பிரமாண்ட தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்திற்காகவே அங்கு எந்தப் படம் ஓடினாலும் சென்று பார்த்தார்கள். காலமாற்றம் தங்கம் தியேட்டர் தற்போது ஒரு பிரபல ஜவுளிக்கடையாக மாற்றி விட்டது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் 'பராசக்தி' படம் 800 தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் அதில் தங்கம் தியேட்டர் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !