உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள்: ரவிமோகன் வருத்தம்

சிவகார்த்திகேயன் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள்: ரவிமோகன் வருத்தம்


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் பொங்கல் வெளியீடாக வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தில் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ளார் ரவிமோகன்.

படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: 'பராசக்தி' சாதாரண படம் அல்ல. எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பினர். நான் 'பராசக்தி' படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் சுதா கொங்கராதான். அவரது படங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் கொடுக்கும். அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.

அதர்வா முரளி ஒரு அற்புதமான சக நடிகர். அவரது பாசிட்டிவ் எனர்ஜியை செட்டில் எல்லோரும் உணர்ந்தோம். இந்தப் படத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது உறுதி. ஸ்ரீலீலா அற்புதமான நடிகை. 'பராசக்தி' படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்.

சிவகார்த்திகேயன் மீது எனக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. பல தருணங்களில் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். படத்தில் அவர் மற்றவர்களை ஓவர்ஷேடோ (மற்றவர் முக்கியத்துவத்தை குறைப்பது) செய்கிறார் என்று ஒரு செய்தி உலவி வருகிறது. அது முற்றிலும் தவறானது.

என்னுடைய கதாபாத்திரம் ஆழமானதாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இப்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் அப்படி செய்வார்களா என தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் அன்பு, அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் அவரது வளர்ச்சிக்கு காரணம்.

'பராசக்தி' தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். படம் வெளியாவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளேன். படம் பார்த்த பெருமையிலும் சந்தோஷத்திலும் சொல்கிறேன், நிச்சயம் 'பராசக்தி' அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !