உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர்

விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர்

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கலில் இருக்கிறது. நாளைய நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்து என்ன என்பது தெரிய வரும். இதனிடையே, இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற சலசலப்பு இரண்டு நாட்களாக இருந்தது. ஆனால், நேற்று மாலை முதல் குரலாக இயக்குனர் அஜய் ஞானமுத்து குரல் கொடுத்தார்.

கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்த 'டிமாண்டி காலனி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. அடுத்து 'இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமாண்டி காலனி 2' ஆகிய படங்களை இயக்கினார். தற்போது அருள்நிதி நடிக்கும் 'டிமாண்டி காலனி 3' படத்தை இயக்கி வருகிறார்.

நேற்று எக்ஸ் தளத்தில், “அதிகாரத்தின் முற்றிலும் தவறான பயன்பாடு.. எந்தத் திரைப்படமும் ஒரு நபரைப் பற்றியது மட்டுமல்ல, அது நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பு, மற்றும் திரைக்கு வருவதற்கு போட்ட பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. குழுவுக்கு அனைத்து வலிமையும் சேரட்டும். இது தளபதியின் படம் மற்றும் அவரது கடைசி படம், அது எப்போது வெளியானாலும் அதை இதுவரை இல்லாத அளவுக்கு கொண்டாடுவோம். தலைவன் படம் எப்போ ரிலீஸோ, அப்போ தியேட்டர் பக்கம் போவேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் பதிவிட்ட இந்தப் பதிவிற்கு ஆதரவாக பல கமெண்ட்டுகள் இருந்தன. அதற்குப் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இன்று காலை 'பராசக்தி' படத்திற்கும் இன்னும் தணிக்கை வழங்கப்படவில்லை என ஒருவர் பதிவிட்டதை மறுபதிவு செய்து, “இது மிகப் பெரிய படங்களுக்கு நிகழ முடியும் என்றால், இது யாருக்கும் நிகழலாம். தணிக்கை வாரியம், இங்கு நியாயமாக செயல்படாமல், தொழில்துறை முழுவதும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதற்காக கண்டிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் சரியானதை ஆதரியுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

'ஜனநாயகன்' படத்திற்கு ஆதரவாக மட்டும் போட்டால் சர்ச்சை எழும் என யோசித்து இன்று 'பராசக்தி' படத்திற்கும் போட்டு தன்னை பொதுவானவராகக் காட்டிக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !