வாசகர்கள் கருத்துகள் (1)
why
விஜய் நடித்து நாளை(ஜன., 9) வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' படத்தின் வெளியீட்டை மறு தேதி குறிப்பிடாமல் தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்துள்ளது. திரையுலகில் கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஜனவரி 14ம் தேதி படத்தை வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். நாளை ஜனவரி 9ம் தேதி நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகுதான் அது முடிவாகும்.
இதனிடையே, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே நேற்று இரவு தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு படத்தைத் தள்ளி வைப்பதாக அறிவித்தது. அதன் பின்னணியில் பல விஷயங்கள் இருப்பதாக இதர திரையுலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாகவே 'டாக்சிக்' படத்தின் அப்டேட்ஸ் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் 'டாக்சிக்' படத்தை அதன் கதாநாயகன் யஷ் உடன் இணைந்து தயாரிக்கிறது.
'டாக்சிக்' படம் மார்ச் மாதம் 26ம் தேதி பான் இந்தியா படமாக மட்டுமல்ல பான் வேர்ல்டு படமாக வெளியாக உள்ளது. அதனால்தான் படத்தை கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். அந்தப் படத்திற்கான வெளியீடு திட்டமிட்டபடி நடந்தாக வேண்டும்.
யஷ், மற்றும் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுடாரியா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் என ஒரு பெரும் நடிகர், நடிகையருடன் பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகி வருகிறது.
'ஜனநாயகன்' படத்தை விடவும் பிரம்மாண்டமான படைப்பு, பிரம்மாண்டமான வெளியீடாக 'டாக்சிக்' படம் அமையப் போகிறது. அந்தப் படத்தை கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் இதர இந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என வெளியிட உள்ளார்கள். இதுவரையில் எந்த ஒரு இந்தியப் படமும் வெளியிடாத அளவிற்கு பெருமளவிலான தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டம் இருக்கிறது.
எதிர்பாராத விதமாக 'ஜனநாயகன்' வெளியீட்டுத் தேதி 'தி ராஜா சாப்' படத்திற்கு இடைஞ்சலாக வந்துவிட்டது. 'ராஜா சாப்' படத்தைத் தயாரித்துள்ள நிறுவனமும் தெலுங்கில் பெரிய நிறுவனம். அவர்களுக்கு 'ஜனநாயகன்' படம் வெளிவருவதால் கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு, தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். அது மட்டுமல்ல சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கிலும் சிரஞ்சீவி, ரவி தேஜா உள்ளிட்டவர்களின் படங்களும் வருகிறது. அவர்களுக்கும் கர்நாடகவில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்துள்ளது. எனவே, தெலுங்குத் திரையுலகத்திலிருந்து மொத்தமாகவே 'ஜனநாயகன்' வெளியீட்டிற்கும் ஒரு அழுத்தம் உருவாகியுள்ளது.
இப்போது விட்டுத் தரவில்லை என்றால் மார்ச் மாதம் 'டாக்சிக்' படத்தை வெளியிடும்போது தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காது. தமிழகத்தில் 'ஜனநாயகன்' படம் ஓடினால் வரும் வசூலை விட 'டாக்சிக்' படம் ஆந்திரா, தெலங்கானாவில் தரும் வசூல் மிக அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, தெலுங்குத் திரையுலகத்தை பகைத்துக் கொள்ள தயங்கி உள்ளார்கள். சினிமா வசூல் என்றால் தென்னிந்தியாவில் தெலுங்குத் திரையுலகம் தரும் வசூல்தான் அதிகம்.
அதிலும் 'ஜனநாயகன்' படத்தின் டிரைலர் வந்த பிறகு அந்தப் படத்தை 'பகவந்த் கேசரி' படத்துடன் ஒப்பிட்டுப் பேசி டிரோல் செய்வது அதிகமாகி உள்ளது. படம் வெளிவந்தாலும் எந்த அளவிற்கு வசூலைப் பெறும், வரவேற்பைப் பெறும் என்ற சந்தேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமாவில் பல நடிகர்களின் ரசிகர்களை பகைத்துக் கொண்டது, அரசியல் சூழல் என பல காரணங்கள் படத்திற்கான எதிர்மறையை அதிகரித்துவிட்டன.
'ஜனநாயகன்' படத்திலும் விஜய்யின் நெருங்கிய சகாவான ஜகதீஷ் தான் இணை தயாரிப்பாளர். அந்தப் படத்தின் ஒப்பந்தங்கள் எப்படி போடப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் லாபம் வந்தாலும் அதை தனித்து யாரும் பங்கு போட்டுக் கொள்ள வாய்ப்பில்லை, சேர்ந்தே தான் பங்கிட முடியும்.
எனவே, 'ஜனநாயகன்' என்ற சிறிய மீனை மீண்டும் கடலுக்குள் விட்டாலும், 'சுறா'வான 'டாக்சிக்' படத்தை தத்தளிக்க விடக் கூடாது என அதைத் தட்டித் தூக்குவதே சாலச் சிறந்தது என அதை நோக்கித்தான் முடிவுகள் போகிறது என டோலிவுட், சாண்டல்வுட், கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
why