உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்

''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்


தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பிரச்னைகள், சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சுரேஷ் காமாட்சி தயாரித்த 'சல்லியர்கள்' படம், பல விருதுகளை பெற்றும், ரெடியாகி பல மாதங்கள் ஆகியும், தியேட்டர் கிடைக்காததால், வேறு வழியின்றி ஓடிடியில் வெளியானது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கொடுக்க மறுப்பதாக தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.

தற்போது ஜன.,9ல் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படக்குழு சென்சார் சான்றிதழ் தாமதத்தால், நீதிமன்றம் சென்றது. அங்கு முறையிட்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் தீர்ப்பு என சொன்னதால், வேறு வழியின்றி ஜனநாயகன் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ஜன.,10ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட 'பராசக்தி' படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இப்படி அடுத்தடுத்து சிக்கல்கள், குளறுபடிகளுடன் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது. இதற்கு திரையுலகினர் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு:

சினிமாவை நேசிப்பவனாக சில யோசனைகள்.. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'சல்லியர்கள்' படத்திற்கு தியேட்டர்கள் இல்லை. விஜய் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'ஜனநாயகன்' படம் நாளை (ஜன.,9) வெளியாக இருந்த நிலையில், சென்சார் தாமதம் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை மறுநாள் (ஜன.,10) வெளியாகும் 'பராசக்தி' படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் பல இடங்களில் முன்பதிவு துவங்கவில்லை.

சினிமாவுக்கு கடினமான காலம்.. தியேட்டர்கள் சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிக ஆதரவை தர வேண்டும். பெரிய படங்களுக்கு சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் கிடைப்பதுபோல, சிறிய படங்களுக்கு கிடைப்பதில்லை. சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரே வருவாய் ஆதாரம், தியேட்டர்கள் மட்டுமே. ஆனால், அந்த தியேட்டர்களே அந்த படங்களை வெளியிட தயங்குவது, சினிமாவை அழிக்கும்.

சாத்தியமற்றதுதிரைப்பட சென்சார் நடைமுறைகளில் தற்போது பின்பற்றப்படும் கடுமையான காலக்கெடுகள், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாட்டு சென்சார் அமைப்புகளின் விதிமுறைகள், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களை, வெளியீட்டுக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே முழுமையாக தயாரித்து முடிக்க வேண்டும் என்ற நிலை, நடைமுறையில் சாத்தியமற்றது. இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன.
இதை நெறிப்படுத்த வேண்டும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இது சற்று எளிதாக்கப்பட வேண்டும். இல்லையெனில், பண்டிகை நாட்களில் கூட பெரிய படங்களை வெளியிட முடியாமல் ஒத்திவைப்பது இறுதியில் இந்த சினிமா துறையையே அழித்துவிடும்.

சினிமாவைக் காப்பாற்றுங்கள்ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட விரோதங்கள், வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு, திரைப்பட சகோதரத்துவத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கலையைக் காப்பாற்ற வேண்டும். சினிமாவைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு அதில் பதிவிட்டு, திரைப்படங்கள் வெளியாவதில் இருக்கும் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !