கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம்
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை விவகாரம் சர்ச்சையாக மாறி, நீதிமன்ற வழக்கு வரை போய் உள்ளது. அதேசமயம் ஜனவரி 10ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'பராசக்தி' படத்திற்கும் தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழை வழங்கவில்லை.
அந்தப் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்து அவர்கள் பார்த்து படத்தில் நிறைய 'கட்'கள் கொடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. அவர்கள் குறிப்பிட்ட அந்த 'கட்'களில் சில காட்சிகள் கட் செய்ய வேண்டியதும், சில வசனங்கள் 'மியூட்' செய்ய வேண்டியதும் இருந்ததாம். அவற்றை படக்குழு சரி செய்து திரும்பவும் தணிக்கை வாரியத்திடம் ஒப்படைத்திருக்கிறார்களாம். அவற்றைப் பார்த்து மாற்றங்கள் சரியாகச் செய்திருப்பின் பின்னர் அதற்கு தணிக்கை சான்றிதழை வழங்குவார்கள் என திரையுலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலைக்குள் சான்றிதழ் கிடைத்துவிடலாம் எனத் தெரிகிறது. ஒரு வேளை தாமதம் ஆனால், அதைப் பொறுத்து தயாரிப்பு நிறுவனம் முடிவெடுக்கலாம். இதுதான் தற்போதுள்ள அப்டேட்.
ஆனால், 'ஜனநாயகன்' போல நீதிமன்றத்தை நாடாமல், அலுவல் ரீதியாக அவர்கள் என்ன சொன்னார்களோ அதை 'பராசக்தி' திருத்தம் செய்து கொடுத்துள்ளது. பரபரப்புக்காக வேறு எதையும் செய்யவில்லை என்றும் திரையுலகில் சொல்கிறார்கள்.