'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி
இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். மேலும், சினிமாவில் 50 ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது: 70களில் மூன்று ராஜாக்கள், தமிழ் சினிமாவிற்கு வந்தார்கள். ஒன்று இளையராஜா, இன்னொன்று பாரதிராஜா, மற்றொன்று பாக்யராஜா.. இந்த மூன்று ராஜாக்களும் தனித்தனி துறையில் கொடிக்கட்டி பறந்தார்கள், இன்னும் அவர்கள் கொடி பறக்கிறது.
திரைக்கதை மன்னர்
திரைக்கதை தான் சினிமாவிற்கு முதுகெலும்பு. அந்த முதுகெலும்புதான் நம்ம பாக்யராஜ். இந்தியாவில் திரைக்கதை மன்னர்கள் என்றால் சலீம் - ஜாவீத் தான். அதுக்கடுத்து அதற்கு இணையாக பாக்யராஜை சொல்லலாம். பாக்யராஜின் படங்கள் எல்லாம் பெண்களை மையப்படுத்தி இருக்கும். அவரின் ஒவ்வொரு படமும் புரட்சிகரமாக இருக்கும். குறிப்பாக 'முந்தானை முடிச்சு' படத்தின் இன்டர்வெல் சீனில் குழந்தை தாண்டும் காட்சி திரைக்கதையாக பிரமிக்க வைத்தது.
என்னை பொறுத்தவரை, பாக்யராஜ்க்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, ஊதியம் எல்லாம் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. இவர் ஹிந்தியில் இருந்திருந்தால், சலீம் - ஜாவீத் இவரை தோளில் தூக்கி பாராட்டியிருப்பர். எம்ஜிஆரே, தனது திரையுலக வாரிசு என பாக்யராஜை சொன்னார். அவர் பணியாற்றுவதை பார்த்தால், ஆண்களுக்கே அவர் மீது காதல் வரும். நான் சொன்ன, 'இது எப்படி இருக்கு' டயலாக், மேனரிசம் எல்லாம் பாக்யராஜ் சொல்லிக்கொடுத்தது.
படையப்பா - பாபா
'படையப்பா' கதை பற்றி பாக்யராஜிடம் பேசியபோது, அந்த நீலாம்பரி கதாபாத்திரம் மட்டும் யாரை போடுகிறீர்களோ தெரியாது, அது ஹிட்டாகிவிட்டால், படம் எங்கயோ போய்விடும் என்றார். அதேபோல், 'பாபா' படத்தின்போதும் அவரிடம் பேசினேன். 'சார், நீங்க ஆன்மிகம் பாலோ செய்றீங்க ஓகே, அதற்காக எல்லாரும் பாலோ செய்றது அவசியம் இல்ல, இது கமர்சியலா எப்படி போகுமோ தெரியாது, கொஞ்சம் ரிஸ்க், சில விஷயங்களை நீங்கள் சேர்க்க வேண்டும்' என சொன்னார். அவர் ஜோசியர் மாதிரி சொன்னது அப்படியே நடந்தது. இப்போது ஒரு படம் பாக்யராஜ் இயக்குவதாக கூறியுள்ளார். நிச்சயம் அந்த படம் ஹிட்டாகும். இவ்வாறு அவர் பேசினார்.